மணப்பாறை முறுக்கிற்கு புவிசார் குறியீடு
மணப்பாறை முறுக்கிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மணப்பாறை முறுக்கிற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மணப்பாறை முறுக்கு
நொறுக்கு தீனிகளில் முதன்மை பெற்றது முறுக்கு. ஆனால் முறுக்கு என்றதும் அனைவரின் நினைவிற்கு வருவது மணப்பாறை தான். திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் முறுக்கு தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர். நாவிற்கு விருந்தளிக்கும் மணப்பாறை முறுக்கை மணப்பாறையை கடந்து செல்வோரில் பெரும்பாலானோர் வாங்கி செல்லாமல் இருக்க முடியாது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, கனடா, லண்டன் என கடல் கடந்து மணப்பாறை முறுக்கு செல்கிறது. ஆனால் புகழ் பெற்ற முறுக்கிற்கு புவிசார் குறியீடு என்ற அங்கீகாரம் இல்லாமல் இருந்தது. நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தற்போது, மணப்பாறை முறுக்கிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி உள்ளது. . இதனால் முறுக்கு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், பணியாளர்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் குடிசை தொழிலாக இருந்து வந்த தொழில் இனி ஏற்றம் பெரும் என்பதில் சந்தேகம் இல்லை என்ற மகிழ்ச்சியோடு மணப்பாறை மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
மகிழ்ச்சி
மணப்பாறை பொத்த மேட்டுபட்டியை சேர்ந்த முறுக்கு உற்பத்தியாளர் ஜேம்ஸ்:- மகத்துவம் நிறைந்த மணப்பாறை முறுக்கிற்கு அங்கீகாரம் வழங்கிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். இப்போது புவிசார்குறியீடு வழங்கி கோரிக்கையை நிறைவேறி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்கள் முறுக்கு தொழிலுக்கான அங்கீகாரமாக கருத்துகிறோம். கண்டிப்பாக தொழிலை மேம்படுத்தி கொண்டு செல்ல இது உதவும்..
மணப்பாறையை சேர்ந்த முறுக்கு தொழிலாளி சத்தியா:- ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பு இருப்பதை போல் மணப்பாறை என்றாலேமாட்டிற்கு அடுத்தபடியாக முறுக்கு தான் அனைவரின் நினைவில் இருக்கும். ஒவ்வொரு ஊருக்குமான சிறப்பை சொல்லி அதற்கான புவிசார் குறியீடு வழங்கிடும் போது மணப்பாறைக்கு எப்போது கிடைக்கும் என்ற ஏக்கத்தில் இருந்த எங்களுக்கு இந்த புவிசார் குறியீடு அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் மணப்பாறை முறுக்கு மகத்துவம் பெரும்.
அடுத்த கட்டத்துக்கு...
மணப்பாறையை சேர்ந்த ஆல்பர்ட் அந்துவன்:- , மணப்பாறை முறுக்கை நான் நண்பர்கள், உறவினர்கள் என பல இடங்களுக்கு வாங்கி அனுப்பி வைப்பேன். என்னதான் புகழ் பெற்றது என்று சொன்னாலும் அதற்கான அங்கீகாரம் என்று சொல்லப்படும் புவி சார் குறியீடு இப்போது தான் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொழிலை நம்பி உள்ளவர்கள் அடுத்த கட்டத்திற்கு தொழிலை கொண்டு செல்ல இது முக்கியமானதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.