பலாப்பழங்களுக்கு புவிசார் குறியீடு: வடகாடு பகுதியில் மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை
பலாப்பழங்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவதுடன், வடகாடு பகுதியில் மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பலாப்பழங்கள்
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, மாங்காடு, அனவயல், புளிச்சங்காடு, கைகாட்டி, நெடுவாசல், கீரமங்கலம், மேற்பனைக்காடு, மறமடக்கி, கொத்தமங்கலம், ஆலங்காடு, கீழாத்தூர், வெள்ளாகுளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலா மரங்களை நட்டு பராமரித்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் மிகுந்த சுவையுடன், மிகவும் ருசியாக இருப்பதால் உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் மும்பை, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் வளைகுடா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இப்பகுதிகளில் நன்கு விளைந்த பலாப்பழங்களை விவசாயிகள் பறித்து வடகாடு, மாங்காடு, அனவயல், புளிச்சங்காடு கைகாட்டி, கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பலாப்பழ கமிஷன் கடைகள் மற்றும் ஏலக்கடைகள் மூலமாக எடை மற்றும் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
புவிசார் குறியீடு
சீசன் சமயங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 டன் முதல் 500 டன் வரை பலாப்பழம் ஏற்றுமதி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர பெரும்பாலான பலாப்பழ விவசாயிகள் பலரும் தங்களது குடும்ப வறுமையின் காரணமாக, தங்களது பலா மரங்களை ஆண்டு கணக்கில் குத்தகை மற்றும் ஒத்திக்கு கொடுத்து வருகின்றனர். இப்பகுதிகளில் டன் கணக்கில் பலாப்பழங்கள் உற்பத்தி ஆனாலும் கூட இதன் மூலமாக, விவசாயிகள் பொருளாதார வளர்ச்சி காண முடியாத நிலை நீடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது சிறிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.50 முதல் ரூ.100-க்கும் பெரிய அளவிலான பலாப்பழம் ஒன்று ரூ.300 முதல் ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சில சமயங்களில் பலா விளைச்சல் அதிகம் இருந்தும் உரிய விலை இல்லாமல் பலா மரங்களிலேயே பழுத்து வீணாகுவதால் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனால் இப்பகுதியில் உற்பத்தியாகும் பலாப்பழங்களுக்கு புவிசார் குறியீடு மற்றும் மதிப்பு கூட்டும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கஜா புயல் பேரழிவு
மாங்காடு பகுதியை சேர்ந்த கணேசன்:- கஜா புயல் பேரழிவில் இருந்து விவசாயிகள் மெல்ல மெல்ல மீண்டெழுந்து வரும் நிலையில், வேளாண் இடு பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யவும், இப்பகுதிகளில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் எந்தவொரு திட்டங்களும் இல்லை. மேலும் அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கு சரிவர கிடைப்பது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இப்பகுதியில் உற்பத்தியாகும் பலாப்பழங்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவதுடன், மதிப்பு கூட்டும் தொழிற்சாலையை இப்பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதிப்பு கூட்டும் தொழிற்சாலைகள்
வடகாடு பகுதியை சேர்ந்த கோபால்:- வடகாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் பலா மரங்களை வளர்த்து வருகிறார்கள். இங்குள்ள பலாப்பழங்கள் மிகுந்த ருசியாக இருக்கும். மதிப்பு கூட்டும் தொழிற்சாலைகள் இப்பகுதிகளில் அமைப்பதின் மூலமாக விவசாயிகள் பயன்பெற வாய்ப்பு இருக்கிறது. மேலும், பலாப்பழங்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுக்க வேண்டும்.
வேளாண் பட்ஜெட்
மாங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி சோமன்:- வேளாண் துறை பட்ஜெட் கூட்டத்தொடரில் இப்பகுதி விவசாயிகளது கோரிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகும் என விவசாயிகள் நினைத்து இருந்த நிலையில் எந்தவொரு அறிவிப்பும் அறிவிக்கப்படாதது இப்பகுதி விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி இருந்தது. இனி வரும் காலங்களிலாவது இப்பகுதி விவசாயிகளது கோரிக்கைகள் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக ஆர்வலர் பிரவின்:- ஒரு நாடு முன்னேற்றம் காண வேண்டுமெனில் விவசாயிகளும், விவசாயமும் வளர்ச்சி காண வேண்டும். இதனால் விவசாயிகளது கோரிக்கைகளை நிறைவேற்றித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.