கன்னியாகுமரி பெண்ணை கரம்பிடித்த ஜெர்மனி வாலிபர்
ஜெர்மனியில் உள்ள நிறுவனத்தில் ஆராய்ச்சி செய்தபோது காதல் மலர்ந்ததால் கன்னியாகுமரி இளம்பெண்ணை ஜெர்மனி வாலிபர் கரம்பிடித்தார்.
அஞ்சுகிராமம்:
ஜெர்மனியில் உள்ள நிறுவனத்தில் ஆராய்ச்சி செய்தபோது காதல் மலர்ந்ததால் கன்னியாகுமரி இளம்பெண்ணை ஜெர்மனி வாலிபர் கரம்பிடித்தார்.
இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கன்னியாகுமரி இளம்பெண்
குமரி மாவட்டம் ராஜாவூரை சேர்ந்தவர் லாசர். இவருக்கு மரிய செல்வி என்ற மனைவியும், அனீஸ், அருண் என்ற 2 மகன்களும், அனு விண்ணிமேரி (வயது29) என்ற மகளும் உள்ளனர்.
இந்தநிலையில் அனு விண்ணிமேரி மேற்படிப்புக்காக ஜெர்மனி நாட்டுக்கு சென்றார். அங்கு பவேரியா மாகாணத்தில் ஜூலியஸ் மேக்சி மிலன் பல்கலைக்கழகத்தில் பயோ பிசிக்ஸ் துறையில் படித்தார்.
காதல் பிறந்தது
இந்தநிலையில் மேற்படிப்பை முடித்த அனு விண்ணிமேரி அங்கேயே ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். அப்போது, அதே நிறுவனத்தில் பயோ பிசிக்ஸ் படித்து விட்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த ரால்ப் ஜோடல் என்பவரது மகன் பேட்ரிக் சிக்பிரிட் கோடல்(31) என்பவரும் ஆராய்ச்சித்துறையில் பணியாற்றினார். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு முதலில் நண்பர்களாக பழகினர். பின்னர், இருவரும் காதலிக்க தொடங்கினர்.
இதனைத்தொடர்ந்து அனு விண்ணிமேரி தனது காதல் பற்றி ராஜாவூரில் உள்ள பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
திருமணத்தில் முடிந்தது
இதையடுத்து ஜெர்மனி மணமகன் பேட்ரிக் சிக்பிரிட் கோடல், தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் குமரி மாவட்டம் ராஜாவூருக்கு வந்தார். பின்னர், இரு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று முன்தினம் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மணமகன் மணமகளுக்கு தாலி செயின் அணிவித்தார்.
தனது காதலின் மலரும் நினைவுகள் குறித்து மணமகன் பேட்ரிக் சிக்பிரிட் கோடல் கூறியதாவது:-
கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டேன்
அனு விண்ணிமேரியுடன் பழகியதன் மூலம் எனக்கு இந்திய கலாசாரத்தின் மீதும், இந்திய குடும்ப வாழ்க்கை முறையின் மீதும் அதிக நாட்டம் ஏற்பட்டது. இதில் ஈர்க்கப்பட்ட எனக்கு அனு விண்ணிமேரி மீது காதல் மலர்ந்தது. எனது காதலையும், திருமணம் செய்ய விரும்புவதையும் அவரிடம் தெரிவித்தேன். அவரும் எனது காதலை ஏற்றுக்கொண்டதால் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டோம். இங்கு விருந்தில் வித விதமான உணவுகள் வைக்கப்பட்டது. பரோட்டா, பிரியாணியும் மிகவும் அருமையாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.