தூத்துக்குடியில் காரில் இருந்து இறங்கி சென்று மாற்றுத்திறனாளி பெண்ணிடம் மனு வாங்கிய முதல்-அமைச்சர்


தூத்துக்குடியில் காரில் இருந்து இறங்கி சென்று  மாற்றுத்திறனாளி பெண்ணிடம் மனு வாங்கிய முதல்-அமைச்சர்
x

தூத்துக்குடியில் காரில் இருந்து இறங்கி சென்று மாற்றுத்திறனாளி பெண்ணிடம் மனு வாங்கிய முதல்-அமைச்சர், அவருக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் காரில் இருந்து இறங்கி வந்து மாற்றுத்திறனாளி பெண்ணிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனு வாங்கினார். அந்த பெண்ணுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு அவர் உத்தரவிட்டார்.

மாற்றுத்திறனாளி பெண்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். கார் விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்த போது, கூட்டத்தினரோடு மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் நின்று கொண்டு இருந்தார். இதனை கவனித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது காரை உடனடியாக நிறுத்துமாறு கூறி உள்ளார். பின்னர் காரில் இருந்து இறங்கி அந்த பெண் இருந்த இடத்துக்கு நடந்தே சென்று மனுவை வாங்கினார். அந்த பெண்ணிடம் என்ன பிரச்சினை என்றும் விசாரித்தார்.

உத்தரவு

அப்போது அந்த பெண், தான் தூத்துக்குடி அருகே உள்ள வாகைகுளத்தைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி மல்லிகா (38). மெக்கானிக்காக இருந்த தனது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார். 15 வயதில் ஷெரீன், ஜெசின் என்ற இரட்டையாக பிறந்த 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் சாயர்புரத்தில் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வாழ்வாதாரத்தை சமாளிக்க தான் வாகைகுளம் பகுதியில் பாக்கெட் பால் விநியோகிப்பதாகவும், தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

அந்த பெண்ணின் கோரிக்கையை கனிவோடு கேட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்த மனுவை தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் வழங்கி, அந்த பெண்ணுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். முதல்-அமைச்சரின் இந்த மனிதாபிமான செயல் அங்கு நின்றவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story