தாட்கோ மூலம் இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம்


தாட்கோ மூலம் இலவச கல்வி பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 18 Sep 2023 6:45 PM GMT (Updated: 18 Sep 2023 6:45 PM GMT)

தாட்கோ மூலம் இலவச கல்வி பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை

தாட்கோ மூலம் இலவச கல்வி பெற விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள்

சென்னை தரமணியிலுள்ள இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அன்ட் அப்ளைடு நியூட்ரிசன் நிறுவனமானது ஐ.எஸ்.ஓ. தரச்சான்று பெற்ற, மத்திய அரசின் சுற்றுலாதுறையின் கீழ் அமையப்பெற்ற, சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் 12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவருக்கு 3 வருட முழு நேர பட்டப்படிப்பு, ஒன்றரை ஆண்டுகள் முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப்படிப்பு.

10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர், உணவு மற்றும் பான சேவையில் கைவினைத்திறன் படிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் துறையில் பட்டயப்படிப்பு, முன் அலுவலக செயல்பாட்டில் பட்டயப்படிப்பு. ஹவுஸ் கீப்பிங் செயல்பாட்டில் பட்டயப்படிப்பு, உணவுமுறை மற்றும் உணவு சேவை முதுகலை பட்டதாரி பட்டயப்படிப்பு, விடுதி செயல்பாடு மற்றும் நிர்வாகத்தில் முதுகலை பட்டயப்படிப்பு சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன், நட்சத்திர விடுதிகள், விமான நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர்தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த, 45 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்ற, குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்கு மிகாதவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும். ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாகபெறலாம்.

இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் இன்று 19.09.2023-க்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள தாட்கோ மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04364-211217 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


Next Story