வேலை பார்த்த இடத்தில் பழகி சிறுமியை மதுரைக்கு கடத்தி வந்த வாலிபர் கைது- விமானத்தில் மராட்டிய போலீசார் அழைத்துச்சென்றனர்
இட்லிக்கடையில் வேலை பார்த்தபோது, அந்த கடைக்காரரின் மகளான 16 வயது சிறுமியிடம் பழகி அவரை மதுரைக்கு கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விமானத்தில் இருவரையும் மராட்டிய போலீசார் அழைத்துச்சென்றனர்.
இட்லிக்கடையில் வேலை பார்த்தபோது, அந்த கடைக்காரரின் மகளான 16 வயது சிறுமியிடம் பழகி அவரை மதுரைக்கு கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். விமானத்தில் இருவரையும் மராட்டிய போலீசார் அழைத்துச்சென்றனர்.
16 வயது சிறுமி
மராட்டிய மாநிலம் தானே பகுதியை சேர்ந்த ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர் அந்த பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். அவரது கடையில் உதவியாளராக, மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள வாழவந்தான்புரத்தை சேர்ந்த மாணிக்கம் (வயது 30) என்பவர் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில், சில தினங்களுக்கு முன்பு, இட்லி கடை உரிமையாளரின் 16 வயது மகள் பள்ளிக்கு சென்றிருந்த நிலையில் மாயமானார். அவரை மாணிக்கம், யாருக்கும் தெரியாமல் மதுரைக்கு கடத்தி வந்துள்ளார். பெற்றோர், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் தானே போலீசில் புகார் செய்துள்ளனர்.
அதே நேரத்தில் கடையில் வேலை பார்த்த மாணிக்கமும் மாயமாகி இருந்ததால், அவர் மீதும் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.
கைது
இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அந்த சிறுமி மதுரையில் மாணிக்கத்துடன் இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மதுரை வந்த மராட்டிய போலீசார், மாணிக்கத்தை கைது செய்தனர். அவரையும், அவருடன் பழகிய சிறுமியையும், மதுரையில் இருந்து விமானம் மூலம் மும்பை அழைத்துச்செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது, முறையான ஆவணங்கள் இல்லாததால் மதுரை விமான நிலையத்தில் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின்னர், மாணிக்கம் கைது செய்யப்பட்டதற்கான சான்று மற்றும் அவர் மீதான புகார் மனு ஆகியவை சமர்ப்பிக்கப்பட்ட பின்பு, அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், வேறு விமானத்தில் சென்னை சென்று, அந்த வழியாக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.