ஆவின் நெய் விலை உயர்வை உடனே திரும்பப்பெறவேண்டும் - சசிகலா
ஆவின் நெய் விலை உயர்வை உடனே திரும்பப்பெறவேண்டும் என சசிகலா வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தி.மு.க. தலைமையிலான அரசு ஆவின் நெய் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.580-ல் இருந்து ரூ.630 ஆக உயர்த்தியிருப்பது யாரும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. இது சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று ஆவின் பால் மற்றும் ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை மாதா மாதம் உயர்த்திக்கொண்டே போனால், ஆவின் பொருட்களை பயன்படுத்துகின்ற சாமானியர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்துவிடும்.
அதன்பின்னர், ஆவின் நிர்வாகத்தையே இழுத்து மூடும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடும். மேலும் பண்டிகை காலமாக இருப்பதால் அதிக விலை கொடுத்து ஆவின் நெய்யை வாங்குகின்ற பயனாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். தமிழகத்தில் ஏற்கனவே புயல், மழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளால் தங்கள் வாழ்வாதாரத்தையே தொலைத்து விட்டு நிற்கும் ஏழை-எளிய சாமானிய மக்களின் நலனை கருத்தில்கொண்டு, உயர்த்தப்பட்ட ஆவின் நெய் விலையை உடனே திரும்பப்பெறவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.