திண்டுக்கல் அருகே ஊருக்குள் புகுந்த மஞ்சள் பைத்தியம் எறும்புகள்;மக்கள் அச்சம்


திண்டுக்கல் அருகே  ஊருக்குள் புகுந்த மஞ்சள் பைத்தியம் எறும்புகள்;மக்கள் அச்சம்
x

நத்தம் அருகே ஊருக்குள் புகுந்த ராட்சத எறும்புகளால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கரந்தமலை பல 100 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மலைப்பகுதி. இந்த மலைப்பகுதியை சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன.

இந்த மலைப்பகுதியின் நடுவே சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய வகை வினோத எறும்புகள் பரவியிருந்தது. இது நாளடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரவியது. தற்போது கடந்த சில நாட்களாக அவ்வகை எறும்புகள் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் பரவ தொடங்கியுள்ளது.

இந்த வினோத வகை எறும்புகள் வனப்பகுதிக்கு சென்றவுடன் மனிதர்கள் உடலில் வேகமாக ஏறுகிறது. குறிப்பாக இந்த எறும்புகள் கண்களை மட்டுமே கடிப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த எறும்புகள் மனிதர்கள் உடலில் ஏறுவதால் அலர்ஜி மற்றும் கொப்புளங்கள் ஏற்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் வேலாயுதம்பட்டிக்கு நேரில் வந்து காப்புக்காடு மலைப்பகுதிகளில் ஆய்வு செய்தனர். அவர்களில் ஆய்வை பற்றி அறிக்கை அளித்துள்ளனர்.

மக்களிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வருவதாலும், சிலர் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்வதாலும் பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இவற்றில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

எறும்புகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அவற்றின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது. அவை மிகவும் ஆபத்தானவை மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின்படி, அவை உலகின் முதல் 100 ஆபத்தான உயிரினங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலரும் வனவிலங்கு ஆய்வாளருமான அசோக சக்கரவர்த்தி தெரிவிக்கையில்

'மஞ்சள் பைத்தியம் எறும்பு'களின் தாக்குதல் கேரளக் காடுகளில் உள்ள பல கிராமங்களில் கடந்த காலங்களில் காணப்பட்டது. அவைகள் குறித்து கேரள மத்திய பல்கலைக்கழக பிரதிநிதிகள் ஆய்வு நடத்தினர்.

கடந்த காலத்தை விட தற்போது இந்த எறும்பு இனங்களின் பரவல் அதிகரித்து வருவதாக தெரிவித்தார். மேலும் தாங்கள் ஆய்வு செய்த காடுகளில் கம்பளிப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், மற்ற பூச்சிகள் மற்றும் ஈக்கள் எண்ணிக்கை இந்த எறும்புகளால் குறைந்துள்ளது.

ஆசியா மஞ்சள் பைத்தியம் எறும்புகளால் பார்வை இழப்பு ஏற்படுகிறது. இவை பெரும்பாலும் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

5 மி.மீ நீளம் வரை உள்ளன. தலை நீண்ட கால்கள் மற்றும் நீண்ட ஆண்டெனா வடிவில் உள்ளது. மஞ்சள் மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இறங்கிய இந்த எறும்புகள், அங்குள்ள லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகளை கொன்று தின்றுவிட்டன.

இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சில தீர்வுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறிய மின்மினிப் பூச்சி போன்ற பூச்சி, இயற்கையான முறையில் இந்த எறும்புகளின் உணவு சங்கிலியை அறுத்து, அவற்றின் சந்ததியை தடுப்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


Next Story