பரமக்குடி இளம்பெண்ணிடம் ரூ.6½ லட்சம் மோசடி
ஆன்லைனில் துணிகள் வாங்கியதற்காக கார் பரிசு விழுந்து உள்ளதாக பரமக்குடியை சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆன்லைனில் துணிகள் வாங்கியதற்காக கார் பரிசு விழுந்து உள்ளதாக பரமக்குடியை சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கார் பரிசு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தென்னவனூர் பகுதியை சேர்ந்தவர் விசுவநாதன் மனைவி சுகன்யாதேவி (வயது29). இவர் பிரபல வர்த்தக செயலியில் அடிக்கடி துணிகளை ஆர்டர் செய்து வாங்கி வந்துள்ளார். இந்தநிலையில் இவரின் செல்போன் எண்ணின் வாட்ஸ்-அப்பிற்கு கடிதம் ஒன்று படமாக வந்துள்ளது. அதில் சுகன்யாதேவியின் பெயரிட்டு மேற்கண்ட வர்த்தக நிறுவனத்தின் 7-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அடிக்கடி பொருட்கள் வாங்கியவர்களுக்கிடையே நடைபெற்ற குலுக்கலில் சுகன்யா தேவிக்கு ரூ.12லட்சத்து 80ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசு விழுந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
கட்டணம்
அந்த காரை பெறுவதற்கு பதிவு கட்டணமாக ரூ.12 ஆயிரத்து 800 செலுத்த வேண்டும் என்றும் கார் வேண்டாம் பணமாக பெற வேண்டும் என்றால் பரிவர்த்தனை கட்டணமாக ரூ.12 ஆயிரத்து 800 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு மகிழ்ந்த சுகன்யா தேவி அதற்கு விருப்பம் தெரிவித்து பதில் அனுப்பிய நிலையில் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர் விவரங்களை சரிபார்த்து சுகன்யா தேவியின் விருப்பத்தை கேட்டு பதிவு செய்துள்ளார்.
அதன் அடிப்படையில் பணமாக பரிமாற்றம் செய்வதற்காக அவரிடம் இருந்து வங்கி பாஸ்புக், ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றை கேட்டு உள்ளனர்.
காருக்கு பதிலாக பணமாக கிடைக்கிறதே என்று மகிழ்ந்த சுகன்யாதேவி ஒன்று விடாமல் அனைத்து விவரங்களையும் அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் மீண்டும் பேசிய மர்ம நபர் பல்வேறு காரணங்களை கூறி பல தவணைகளில் ரூ.6 லட்சத்து 67 ஆயிரத்து 900 பணம் பெற்று உள்ளனர்.
இவ்வளவு பணம் செலுத்திவிட்டோமே இந்த பணத்தையும் கடைசியாக செலுத்தி பரிசுத்தொகையை பெற்றுவிடுவோம் என்று வேறு வழியின்றி அவர்கள் கேட்ட பணத்தை அனுப்பி வந்த நிலையில் சுகன்யா தேவிக்கு சந்தேகம் ஏற்பட்டு மர்ம நபர்களை தொடர்பு கொண்டுள்ளார்.
புகார்
அவர்களின் அனைத்து எண்களும் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சுகன்யாதேவி தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.