அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி: வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு


அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி:  வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு
x

அண்ணா பிறந்தநாளையொட்டி நடந்த சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் மதிவேந்தன் பரிசு வழங்கினார்.

நாமக்கல்

சைக்கிள் போட்டி

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நாமக்கல்லில் நடந்தது. 13, 15, 17 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக 6 பிரிவுகளில் இந்த போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து 120 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டிகளில் 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் செட்டியம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ஹரிஸ், 13 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் காமராஜர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரபஞ்சனா, 15 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் இம்ரான், 15 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அபூர்வா, 17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலைப்பட்டி செல்வம், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரித்திக், 17 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்மிதா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.

பரிசளிப்பு

இந்த நிலையில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கினார். கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் 4 முதல் 10 இடங்கள் பெற்றவர்களுக்கு பரிசு ரூ.250 என மொத்தம் ரூ.70 ஆயிரத்து 500 பரிசுக்கான காசோலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன் உள்பட அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story