பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்


பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற  நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசு  அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்
x

தூத்துக்குடியில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கி பாராட்டினார்.

பாராட்டு

2022-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நேற்று காலை நடந்தது. விழாவுக்கு தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு நகராட்சி அனைத்து பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பாலசந்தர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களின் குரல் ஆசிரியர் சீத்தாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட தலைவர் பிரின்ஸ் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தனித்துவம்

மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்து உள்ளது. தற்போது எல்லோரும் செல்போன்களில் அதிக நேரம் செலவழிக்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. அதற்கு பெற்றோரும் சில தியாகங்களை செய்ய வேண்டும்.

குழந்தைகளை பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சில மாணவ, மாணவிகள் என்னால் படிக்கமுடியவில்லை என்று சோர்ந்து விடுகின்றனர். அவர்களுக்கு என்ன படிக்க முடியுமோ, அதனை ஊக்குவிக்க வேண்டும், பெற்றோர்களின் எண்ணங்களை மாணவர்கள் மீது அழுத்தம் கொடுக்க கூடாது. ஒவ்வொருவரும் தனித்துவம் கொண்டவர்கள். அதில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அனைத்து குழந்தைகளும் வரும் காலத்தில் நல்ல நிலைக்கு வளர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் அரிகணேசன், ஸ்டாலின் பாக்கியநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story