இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஊட்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேபாளம் பர்பத் பகுதியை சேர்ந்தவர் சுஜின் (வயது 25). இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பிந்து (24) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் திருமணம் முடிந்த பிறகு நீலகிரி மாவட்டம் கே.பாலடா பகுதிக்கு வந்த இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அதே பகுதியில் தோட்டங்களில் கேரட் அறுவடை செய்யும் பணி செய்து வந்துள்ளனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிந்துவின் பெற்றோரும் கேத்தி பாலாடா பகுதிக்கு வந்து இவர்கள் வசிக்கும் வீடு அருகில் தனியாக வீடு எடுத்து தங்கி அவர்களும் கூலி வேலைக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி சுஜின் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்ட பிந்து அருகில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 2-வது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் சுஜின் அந்த குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் கேத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகமணி, சப் -இன்ஸ்பெக்டர் நவீன் குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று, பிந்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.