இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ஆவடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி,
ஆவடியை அடுத்த கோவில்பதாகை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் வினோதினி (வயது 22). இவர், வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்து வந்தார்.
வினோதினி நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் மொட்டை மாடிக்கு செல்லும் வழியில் உள்ள இரும்பு கேட்டில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆவடி டேங்க்பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோதினி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் 3 பேர்...
சென்னை சைதாப்பேட்டை பழைய மாம்பலம் சாலையை சேர்ந்தவர் சுதாலெட்சுமி (33). இவருடைய கணவர் ராமசந்திரன். இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். சுதாலெட்சுமிக்கும், அவரது கணவருக்கும் கடந்த சில நாட்களாகவே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த சுதாலெட்சுமி நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல் தேனாம்பேட்டை எஸ்.எஸ்.புரம் ராதா நகரை சேர்ந்த சிவகுமார் (34) என்பவரும், தியாகராயநகர் மதுர வீரன் கோவில் தெருவை சேர்ந்த ராகுல்குமார் (25) என்பவரும் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.