பள்ளி வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து பத்தாம் வகுப்பு மாணவி பலி


பள்ளி வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து பத்தாம் வகுப்பு மாணவி பலி
x

அய்யம்பேட்டை அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் பள்ளி வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மற்றொரு மாணவி படுகாயம் அடைந்தார்.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை;

அய்யம்பேட்டை அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் பள்ளி வளாகத்தில் மரம் முறிந்து விழுந்து பத்தாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். மற்றொரு மாணவி படுகாயம் அடைந்தார்.

பத்தாம் வகுப்பு மாணவி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.அய்யம்பேட்டை அருகே கண்டக்கரயம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி பத்மா. இவர்களுடைய மூத்த மகள் சுஷ்மிதாசென்(வயது 15). கணபதி கிராமம் தட்டாரத்தெருவை சேர்ந்தவர் கந்தன். இவருடைய மகள் ராஜேஸ்வரி(15). இவர்கள் இருவரும் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் உள்ள புனித கபிரியேல் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர்.

வேரோடு சாய்ந்த மரம்

நேற்று மாலை இந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது பள்ளியில் வகுப்புகள் நிறைவு பெற்றதால் சுஷ்மிதாசென்னும், ராஜேஸ்வரியும் வீட்டுக்கு செல்ல பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியே வந்தனர்.அந்த நேரத்தில் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு தூங்கு மூஞ்சி மரம் திடீரென வேரோடு சாய்ந்து சுஷ்மிதாசென், ராஜேஸ்வரி ஆகிய இருவர் மீதும் விழுந்தது. இதில் இரண்டு மாணவிகளும் மரத்தின் இடுபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

பரிதாப சாவு

இதனால் அதிா்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியைகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 2 மாணவிகளையும் மீட்டு சிகிச்சைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுஷ்மிதாசென், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். ராஜேஸ்வரி மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

சாலை மறியல்

இந்த நிலையில் உயிரிழந்த மாணவி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட மாணவியின் உறவினர்கள் திடீரென அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி எதிரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாபநாசம் தாசில்தார்(பொறுப்பு) முருககுமார், வருவாய் ஆய்வாளர் ரெஜிலா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜ்குமார், முகமது முபாரக் அலி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மகாலெட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

1 More update

Next Story