15 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி சிறுமி பலி


15 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி சிறுமி பலி
x

திருப்பூரில் 15 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடந்து சென்ற சிறுமி மீது மோதியதில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

திருப்பூர்

திருப்பூரில் 15 வயது சிறுவன் ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடந்து சென்ற சிறுமி மீது மோதியதில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உணவகம் நடத்தி வருகிறார்

தேனி மாவட்டம், ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 48). இவரது மனைவி கோமதி (40). இவர்களுக்கு பாக்கியாஸ்ரீ (15), தன்ஷியா (13), தீபிகா (11), என்ற 3 மகள்களும் பால்பாண்டியன் (7) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருப்பூர் வந்தனர்.

இவர்கள் திருப்பூரில் தாராபுரம் ரோடு கோவில்வழி அருகே வாய்க்கால் மேடு செல்லும் வழியில் கந்தசாமி தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். கோவில் வழி, தாராபுரம் சாலையில் உணவகம் ஒன்றை ஆதிநாராயணன் நடத்தி வருகிறார். 3-வது மகள் தீபிகா அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

கார் மோதி சிறுமி பலி

இந்த நிலையில் நேற்று மதியம் 3-வது மகள் தீபிகா வீட்டில் இருந்து ஓட்டலுக்கு செல்ல சாலையோரம் நடந்து வந்தார். அந்த பகுதியில் இருந்த ஒரு இறைச்சி கடை அருகே வந்தபோது அந்த வழியாக தாராபுரம் சாலையை நோக்கி ஒரு கார் வந்தது. அதனை அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளார். திடீரென்று சிறுவனின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி இறைச்சி கடை முன் நின்றிருந்தவர்கள் மீது மோதுவது போல் வந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினார்கள். இதற்கிடையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற சிறுமி தீபிகா மீது மோதியது. அத்துடன் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. அதில் தீபிகாவின் தலை மண்ணில் புதைந்து சம்பவ இடத்திலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீ்ஸ் விசாரணை

கார் ஓட்டி வந்த சிறுவன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் சிறுமியின் பிணத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். மருத்துவமனையில் சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.


Related Tags :
Next Story