பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக தாய், உளுந்தூர்பேட்டை போலீஸ்காரர் மீது வழக்கு


பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக தாய், உளுந்தூர்பேட்டை போலீஸ்காரர் மீது வழக்கு
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய தாய், உளுந்தூர்பேட்டையை சேர்ந்த போலீஸ்காரர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

புதுப்பேட்டை,

போலீஸ்காரருடன் பழக்கம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள அங்குசெட்டிப்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி ஜெயமாலா(வயது 40). இவர்களுடைய மகள்கள் ஜெகன்பிரியா, சத்தியபிரியா(21), மகன் கிரி. சக்திவேல் உயிரிழந்து விட்டதால், ஜெயமாலா அதே பகுதியில் உள்ள செங்கல்சூளையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து தனது குழந்தைகளை கவனித்து வந்தார்.

இந்த நிலையில் மூத்த மகள் ஜெகன்பிரியாவுக்கும், கொங்கராயனூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஜெகன்பிரியாவின் கணவருடைய தம்பியும், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சிறப்பு காவல்படையில் பணியாற்றி வரும் போலீஸ்காரருமான ரூபன்பதி என்பவர் அடிக்கடி ஜெயமாலா வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது ஜெயமாலாவுக்கும், ரூபன்பதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது.

தற்கொலை

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி ஜெயமாலா வீட்டுக்கு ரூபன்பதி வந்து ஜெயமாலா மற்றும் சத்தியபிரியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஜெயமாலா, சத்தியபிரியா, கிரி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அன்று இரவு, அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் காலையில் வேலைக்கு சென்று விட்டார்.

பின்னர் சிறிது நேரத்தில் சத்தியபிரியா வீட்டின் பின்புறம் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வழக்குப்பதிவு

இதுகுறித்து கிரி, தனது அக்காள் சாவில் சந்தேகம் இருப்பதாக புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஜெயமாலாவும், ரூபன்பதியும் கொடுத்த தொல்லையால் சத்தியபிரியா தற்கொலை செய்த கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ஜெயமாலா, ரூபன்பதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story