12 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த பெண்


12 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த பெண்
x
தினத்தந்தி 9 Jun 2023 12:30 AM IST (Updated: 9 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

12 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த பெண்

கோயம்புத்தூர்

சொர்க்கமே என்றாலும்...

அது நம்ம ஊரு போல வருமா...

என்ற வரிகளின் அர்த்தத்தை தன் பிறந்த மண்ணை விட்டு பிரிந்து வாழும் மானுடர்கள் நன்றாக அறிந்து இருப்பார்கள்... அனுபவித்து இருப்பார்கள்...

உண்மையில் தான் பிறந்த மண் சொர்க்கம் தான்...

ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டு தன் சொந்த ஊர் எது... நாம் இருக்கும் இடம் எது என்று தெரியாமல் இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை...

இப்படி ஒரு பெண் இடம்பெயர்ந்து ஊர் ஊராய் சுற்றி... பின்னர் பெண் குணமடைந்து 12 ஆண்டுகளுக்கு பின்னர் தனது குடும்பத்தை சந்திப்பது மிகப்பெரிய பாக்கியம் அல்லவா...

எல்லையில்லா மகிழ்ச்சியில் அந்த பெண் துள்ளி குதித்து, தனது சொந்தத்தை ஆனந்த கண்ணீருடன் கட்டி தழுவிய சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்

அந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

கோவையில் கடந்த 2014-ம் ஆண்டு சாலையில் சுற்றித்திரிந்த ஆதரவற்றவர்களை கோவை மயிலேறிபாளையத்தில் உள்ள உதவும் கரங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் மீட்டு தங்கள் காப்பகத்திற்கு கொண்டு சென்றனர்....

அதில் 40 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒருவர் ஆவார்...

அவருக்கு தொடர்ந்து காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.... இதன் காரணமாக அந்த பெண் கொஞ்சம்... கொஞ்சமாக குணமடைய தொடங்கினார்.

தொடர்ந்து அவரிடம் கேட்டபோது தான்... தனது ஊர், குடும்பம் குறித்த தகவலை காப்பக நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.

ஆஸ்பத்திரியில் இருந்து மாயமானார்

இதையடுத்து காப்பக நிர்வாகிகள் அவர் கூறிய விலாசத்தில் விசாரித்தனர். அப்போது அந்த பெண் செங்கல்பட்டை சேர்ந்த முனுசாமி என்பவரின் மனைவி ராணி என்பதும், அவருக்கு இளவரசன், நரசிம்மராஜ் என்று 2 மகன்கள் இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து விசாரித்தபோது, மனநிலை பாதிக்கப்பட்டு இருந்த ராணியை கடந்த 2011-ம் ஆண்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் முனுசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ராணி திடீரென அங்கிருந்து மாயமாகிவிட்டார். பின்னர் அவரை முனுசாமி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளனர். ஆனால் முனுசாமி மற்றும் அவரது மகன்கள் தொடர்ந்து ராணியை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இதற்கிடையில் ஊர்.. ஊராக அலைந்து திரிந்த ராணி 2014-ம் ஆண்டு கோவைக்கு வந்துள்ளார். அப்போது தான் உதவும் கரங்கள் அமைப்பினர் மீட்டு சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

12 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

இந்த நிலையில் இளவரசனின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து உதவும் கரங்கள் அமைப்பினர் போன் செய்து, உங்கள் தாய்... ராணி கோவையில் உள்ள காப்பகத்தில் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்த செய்தியை கேட்டதும் அம்மா காணாமல் போனதால் ஏக்கத்துடன் இருந்த இளவரசன், தாய் உயிருடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்.

உடனே தனது தந்தையை அழைத்துக்கொண்டு, அம்மாவை பார்க்க கோவைக்கு விரைந்தார்.

பின்னர் காப்பகத்திற்கு முனுசாமி, இளவரசன் சென்றனர். அப்போது அங்கிருந்த ராணி 12 ஆண்டுகளுக்கு பின் கணவரையும், மகனையும் பார்த்த சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் சிந்தினார். தொடர்ந்து 2 பேரையும் கட்டித்தழுவி சந்தோஷமடைந்தார்.

12 ஆண்டுகளுக்குப்பின் குடும்பத்தை சந்தித்த மகிழ்ச்சியில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தார்.

நன்றி

பின்னர் முனுசாமி தனது மனைவிக்கு சிகிச்சை அளித்து பாதுகாத்த உதவும் கரங்கள் அமைப்புக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, ராணியை அழைத்துக்கொண்டு சொந்த ஊரான செங்கல்பட்டுக்கு புறப்பட்டு சென்றனர். கூட்டை விட்டு வழித்தவறி வந்த ராணி, மீண்டும் தனது குடும்பத்தினருடன் சேர்ந்ததையடுத்து அவருடன் இருந்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story