சாலையோரம் தூங்கிய பெண்ணின் தலையில் கல்லைப்போட்டு கொலை- நகைக்காக வாலிபர் வெறிச்செயல்
சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம்
சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மூதாட்டி கொலை
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள வேடர் புளியங்குளத்தை சேர்ந்த முத்துப்பிள்ளை (வயது 66) என்ற பெண், நேற்று முன்தினம் இரவில் திருநகர் 3-வது பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையோரமாக தூங்கி கொண்டிருந்தார். நேற்று காலை அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. அதை பார்த்தவர்கள் திருநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்து போலீசார் முத்துப்பிள்ளையின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில் ஒரு வாலிபர், மூதாட்டியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ததும், நகைக்காக இந்த கொடூர செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
வாலிபர் கைது
இதனையடுத்து தனக்கன்குளத்தை சேர்ந்த அலெக்ஸ்(32) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் மூதாட்டியை நகைக்காக தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக அவர் தெரிவித்தார். போலீசார் அவரை கைது செய்தனர். இவர் மீது இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். நகைக்காக சாலையோரம் தூங்கிய மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.