கடலில் 2 மணி நேரம் படகில் பயணித்தபடி சிலம்பாட்டம் அண்ணன்-தங்கை சாதனை
பிச்சாவரம் தொடங்கி பழையாறு வரை 2 மணி நேரம் படகில் பயணித்தபடி சிலம்பாட்டமாடி சாதனை படைத்த அண்ணன்- தங்கையை கிராம மக்கள் பாராட்டினர்.
கொள்ளிடம்:-
பிச்சாவரம் தொடங்கி பழையாறு வரை 2 மணி நேரம் படகில் பயணித்தபடி சிலம்பாட்டமாடி சாதனை படைத்த அண்ணன்- தங்கையை கிராம மக்கள் பாராட்டினர்.
படகில் அண்ணன்-தங்கை சிலம்பாட்டம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் சோழகன் பேட்டை கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன்-அம்சா தம்பதியின் மகன் அதியமான்(வயது 12), மகள் ஆதிஸ்ரீ(9). அதியமான் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பும், ஆதிஸ்ரீ, 4-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
சிலம்பாட்ட வீரர்களான இவர்கள், தி.மு.க. தலைவர் மறைந்த கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு படகில் பயணித்தபடி சிலம்பாட்டமாடி சாதனை படைக்க திட்டமிட்டனர்.
கடலில் 2 மணி நேரம் பயணம்
அதன்படி கடலூர் மாவட்டம் பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பழையாறு வரை கடலில் 2 மணி நேரம் தனித்தனி படகுகளில் பயணித்தபடி அண்ணனும், தங்கையும் சிலம்பாட்டமாடினர். பழையாறு வந்தடைந்த அவர்களை சீர்காழி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி தலைவர் மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
சாதனை
அண்ணன் மற்றும் தங்கையின் சாதனையை ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ், பதக்கங்களை வழங்கினர்.
கடலில் 2 மணிநேரம் படகில் பயணித்தபடி சிலம்பாட்டமாடிய அண்ணன்-தங்கையை பழையாறு மீனவ பஞ்சாயத்தார், மீனவ கிராம மக்கள் பாராட்டினர்.