ராஜீவ் காந்தி வழக்கில் இருந்து ஏனைய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - சசிகலா


ராஜீவ் காந்தி வழக்கில் இருந்து ஏனைய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது - சசிகலா
x

ராஜீவ் காந்தி வழக்கில் இருந்து ஏனைய ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என சசிகலா கூறியுள்ளார்.

சென்னை,

ராஜீவ் வழக்கில் பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து சிறையில் இருந்த 6 பேரும் இன்று சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு சசிகலாவும் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ராஜீவ் காந்தி வழக்கில் இருந்து பேரறிவாளன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கும் உச்ச நீதிமன்றம் விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

30 ஆண்டுகாலம் தங்களது வாழ்க்கையை தொலைத்த நிலையில் இன்று அதற்கு ஒரு நல்ல முடிவு கிடைத்திருப்பது சொந்தங்களுக்கும் சந்தோசத்தை அளித்துள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்காலத்தில், ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரை, விடுதலை செய்வதற்காக 2014, பிப்ரவரி 19-ல் தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது.

அதனைத் தொடர்ந்து ஏழு பேரின் ஆயுள் தண்டனையையும் ரத்துசெய்து அவர்களை விடுதலை செய்ய புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்தபோது தனிக்கவனம் எடுத்துக்கொண்டார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தனது இறுதி மூச்சுவரை இந்த ஏழு பேரின் விடுதலைக்காக தொடர்ந்து போராடியதை யாராலும் மறுக்க முடியாது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இன்று ஒரு நல்ல தீர்வு கிடைத்திருக்கிறது. நம் அம்மா அவர்கள் நம்மை விட்டு பிரியாமல் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருந்தால், முன்கூட்டியே நமக்கு இந்த நல்ல விசயங்கள் நடந்து இருக்கும். இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் சுதந்திர காற்றை சுவாசிக்க இருக்கும் அனைவரும் சந்தோசத்தையும், நிம்மதியையும் பெற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




Next Story