கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி நடைபாலம்


கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி நடைபாலம்
x

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி இழை நடை பாலப் பணியை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில்,

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் அதன் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

கடல்நீர்மட்டம் தாழ்வான காலங்களில் விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டுமே படகுகள் இயக்கப்படுகிறது. இதனால் கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்க்க முடியாத நிலை உள்ளது.

எனவே, விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் நடைபாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

கண்ணாடி இழை நடைபாலம்

இந்த கோரிக்கையையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் நேற்று விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும்-திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும் இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி இழை நடைபாலம் அமைக்கும் பணியின் தொடக்க விழா கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டப பாறை பகுதியில் நேற்று நடந்தது. இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுதளத்தில் இருந்து படகு மூலம் அமைச்சர்கள், அதிகாரிகள், மேயர் உள்ளிட்டோர் சென்றனர்.

நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கண்ணாடி இழை இணைப்பு பாலம் அமைக்கும் பணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

முன்னதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக படகுதளத்தில் இந்த பாலம் தொடர்பாக வைக்கப்பட்டு இருந்த வரைபடம், தொழில்நுட்ப விவரங்கள், பாலம் மாதிரி வரைபடம் ஆகியவற்றை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

உல்லாச படகு சவாரி

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை செல்லும் வகையில் உல்லாச படகு சவாரி இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி அதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று நடந்தது.

கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து தளத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு படகு சவாரியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து திருவள்ளுவர் நவீன சொகுசு படகு கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றது. அதில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியோடு பயணம் செய்தனர்.

77 மீட்டர் நீளத்தில் அமையும் கண்ணாடி பாலம்

ரூ.37 கோடி மதிப்பீட்டில் கண்ணாடி இழை நடைபாலம் பணிக்கான ஒப்பந்தத்தை சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம் எடுத்துள்ளது. இந்த பாலத்தின் அடித்தளம் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் ஆகியவை அமைந்துள்ள இரு பாறைகளில் அமைக்கப்பட உள்ளது. இந்த இரு பாறைகளுக்கு இடையேயான மொத்த நீளம் 77 மீட்டர் ஆகும். இந்த பாலத்தின் மொத்த உயரம் 7 மீட்டர். மொத்த அகலம் 10.90 மீட்டர். சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் பாதையின் அகலம் 10 மீட்டர். நடை பாலத்தில் மொத்தம் 61.59 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடி அமைக்கப்பட உள்ளது. இந்த கண்ணாடியின் அகலம் 2.4 மீட்டர். பாலத்தின் மேல் பகுதி வில் போன்ற வளைவுடன் அமைக்கப்பட உள்ளது. அதன் அதிகபட்ச உயரம் 11.19 மீட்டர். இதில் பொருத்தப்பட உள்ள இரும்பு பிளேட்டின் தடிமன் 20 மி.மீ. இருக்கும். இந்த பாலத்தில் துருப்பிடிக்காத நவீன கம்பிகள் பொருத்தப்பட உள்ளன. இந்த கம்பிகள் ஜெர்மன் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாலத்தில் நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் கீழே உள்ள கடலின் அழகை ரசித்தவாறு செல்வதற்கு வசதியாகத்தான் நடைபாதையில் கண்ணாடிகள் பொருத்தப்பட உள்ளன.


Next Story