கடந்த 50 ஆண்டுகளில் புவிவெப்பம் இருமடங்காக அதிகரிப்பு-தமிழ்நாடு அறிவியல் இயக்க தலைவர் தகவல்
புவிவெப்பம் கடந்த 50 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்து உள்ளது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.
ஊட்டி
புவிவெப்பம் கடந்த 50 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்து உள்ளது என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.
கருத்தரங்கு
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வள ஆய்வு மைய வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு ஆய்வு மையத்தின் தலைவர் சுந்தராம்பாள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட தலைவரும், ஆசிரியருமான ராஜு கலந்துக்கொண்டு பேசியதாவது:- உலக சுற்றுச்சூழல் ஐக்கிய நாடுகளின் சபையின் வேண்டுகொளுக்கு இணங்க உலகம் முழுவதும் ஜூன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. பூமி தன்னுடைய வாழ்நாளில் இதுவரை 5 முறை பேரழிவை சந்தித்துள்ளதாக அறிவியல் கூறுகிறது. பூமியின் சமநிலை மாறும்போதெல்லாம் தன்னை நேர்படுத்திக்கொள்ள இத்தகைய பேரழிவுகள் ஏற்படும். தற்போது பூமி தன்னுடைய ஆறாவது அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
இருமடங்கு அதிகரிப்பு
புவிவெப்பம் கடந்த 50 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வரை புவிவெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புவி வெப்பத்திற்கு காரணமான பசுமைக்குடில் வாயுக்களில் முக்கியமான கார்பன்டை ஆக்சைடின் அளவு உலக மக்கள்தொகையின் எடையைவிட 200 மடங்கு மடங்கு அதிகரித்துள்ளது. இனி உலக மக்கள் அதீத புயல், வறட்சி போன்ற காலநிலை மாற்றத்தில்தான் வாழவேண்டியிருக்கும். பல்லுயிர் சூழல்களின் அழிவு அனைவரையும் கவலையுறச்செய்கிறது. வரைமுறையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டில் காற்று, நீர் மண்டலம் போல பிளாஸ்டிக் மண்டலமே உருவாகியுள்ளது. தாய்ப்பாலில் கூட பிளாஸ்டிக் விஷம் கலந்துள்ளது, நிலைமையின் தீவிரத்தை உணர்த்துகிறது. நாம் வாழ்வதற்கு பூமியைத்தவிர வேறு இடம் இல்லை என்பதை மக்கள் புரிந்துக் கொண்டால் மட்டுமே மனித குலம் வாழமுடியும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக மையத்தின் விஞ்ஞானி டாக்டர் சுதிர்குமார் அனைவரையும் வரவேற்றார். விஞ்ஞானி டாக்டர் வனிதா நன்றி வழங்கினார். தொழில்நுட்ப அலுவலர்கள் முருகேசன், ஜார்ஜ், சிவலிங்கம், பிளஸ்சி மற்றும் மாணவர்கள் மற்றும் கலந்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இதேபோல் சுற்றுச்சூழல் தினத்தை வலியுறுத்தி பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.