ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்


ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாலை பணி நடைபெறும் இடத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

சாலை பணி நடைபெறும் இடத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

குறுகலான சாலை

பொள்ளாச்சி-கோட்டூர் ரோட்டில் ஆழியாறு, குரங்கு நீர்வீழ்ச்சி, வால்பாறை போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. இதன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதற்கிடையில் கிராமப்புறங்களை சேர்ந்த விவசாயிகளும் விளை பொருட்களை கோட்டூர் ரோடு வழியாகத்தான் பொள்ளாச்சிக்கு கொண்டு வருகின்றனர். இந்த சாலை குறுகலாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு, கோட்டூர் ரோட்டை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரங்களில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன.

மேலும் குழிகள் இருப்பது தெரிவதற்கு மணல் மூட்டைகளை வரிசையாக வைத்து உள்ளனர். ஆனால் அதில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஒளிரும் ஸ்டிக்கர்

விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்தை மேம்படுத்தவும் குறுகலாக உள்ள சாலையை அகலப்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் விபத்துகளை தடுக்க பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஆவல் சின்னாம்பாளையம், சமத்தூர் பகுதிகளில் இரவு நேரங்களில் சாலையோரத்தில் குழிகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.

மணல் மூட்டைகளை வைத்த அதிகாரிகள், அதன் மீது ஒளிரும் ஸ்டிக்கர்களை பொருத்தி இருந்தால் குழிகள் இருப்பது தெரியும். எனவே அதிகாரிகள் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கிடையில் நல்லா இருக்கிற ரோட்டை சாலை மேம்பாடு செய்வதாக கூறி தோண்டி போட்டு உள்ளனர்.

இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நன்றாக இருக்கிற சாலையை மேம்பாடு செய்வதை தவிர்த்து, மோசமாக இருக்கிற சாலையை கண்டறிந்து சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story