குளுந்தாளம்மன் கோவில் தேரோட்டம்


குளுந்தாளம்மன் கோவில் தேரோட்டம்
x

குளுந்தாளம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

திருச்சி

கல்லக்குடி:

சித்திரை திருவிழா

புள்ளம்பாடியின் காவல் தெய்வமாக உள்ள குளுந்தாளம்மன் கோவிலில், இந்த ஆண்டும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமையன்று காப்பு கட்டி திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கடந்த மாதம் 25-ந் தேதி மறுகாப்பு கட்டப்பட்டது.

மறுநாள் காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இரவில் அன்ன வாகனத்தில் அலங்கார மண்டபத்தில் அம்மன் எழுந்தருள, பின்னர் சாமி வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார்.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை 10 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் ஆங்காங்கே கிராம மக்கள் கிடா வெட்டி வேண்டுதலை நிறைவேற்றி, சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்து, இரவு 7 மணியளவில் நிலையை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் சாமி தங்கப்பல்லக்கில் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து அருள்பாலித்தார்.

விழாவில் லால்குடி கோட்டாட்சியர் வைத்தியநாதன், புள்ளம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் தியாகராஜன், பேரூராட்சி தலைவர் ஆலீஸ்செல்வராணி ஜோசப்செல்வராஜா மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து வருகிற 5-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், சாமி ஊர்வலமும், 6-ந் தேதி மதியம் சாமி குடிபுகுதல், விடையாற்றி நிகழ்வும் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் ஆன்மீக சொற்பொழிவு, பக்தி மற்றும் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள், கிராம காரியஸ்தர்கள், ஆலய திருப்பணி குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் பிரபு, கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் தலைமையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story