ஜி.என். மில்ஸ் மேம்பாலத்தில் சோதனை ஓட்டம்


ஜி.என். மில்ஸ் மேம்பாலத்தில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 29 Jun 2023 12:30 AM IST (Updated: 29 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஜி.என். மில்ஸ் மேம்பாலத்தில் சோதனை ஓட்டம்

கோயம்புத்தூர்

கவுண்டம்பாளையம்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என். மில்ஸ் பகுதியில் கட்டப்பட்டு உள்ள மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளது. அதை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ரூ.41¾ கோடியில் மேம்பாலம்

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. தொடர்ந்து ஜி.என்.மில்ஸ் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இங்கு 658 மீட்டர் தூரத்தில் ரூ.41 கோடியே 88 லட்சத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. பெரும்பாலான பணிகள் முடிந்துள்ள நிலையில், இன்னும் ஒருசில பணிகள் மட்டுமே செய்ய வேண்டும். எனவே இந்த மேம்பாலத்தில் சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சோதனை ஓட்டம்

இதையடுத்து தேசிய நெடுஞ்சாலைத்துறை நேற்று காலை 10 மணியளவில் இந்த மேம்பாலத்தை சோதனை ஓட்டத்துக்காக திறந்து விட்டனர். இதை தொடர்ந்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மிக்க மகிழ்ச்சியுடன் மேம்பாலத்தில் பயணித்தனர்.

வாகனங்கள் சென்றதும் இந்த மேம்பாலம் தரமாக இருக்கிறதா? வாகனங்கள் செல்ல தகுதியானதா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மேம்பால பணிகள் நடந்து வந்ததால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மேம்பாலம் சோதனை ஓட்டத்துக்காக திறக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் எளிதாக வாகன ஓட்டிகள் சென்று வருகிறார்கள். இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

விரைவில் திறக்கப்படும்

ஜி.என்.மில்ஸ் பகுதி மேம்பாலத்தில் சோதனை ஓட்டத்துக்காக 3 நாட்கள் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அதுவும் பகல் நேரத்தில் மட்டும்தான் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி உண்டு. இன்னும் சாலை நடுவே தடுப்புச்சுவர் வேலை, வர்ணம் பூசும் வேலை நடப்பதால் இரவில் செல்ல அனுமதி இல்லை.

எனவே இதில் வாகன ஓட்டிகள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சோதனை ஓட்டம் நடத்திய பின்னர் அதன் தரம் தொடர்பாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் அரசிடம் இருந்து பாலத்தை திறக்க உத்தரவு வரும். அது வந்ததும் மேம்பாலம் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story