ஜி.என். மில்ஸ் மேம்பாலம் அடுத்த மாதம் திறக்கப்படும்
கோவையில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டு வரும் ஜி.என். மில்ஸ் மேம்பாலம் அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு பிறகு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.
கோவை
கோவையில் ரூ.42 கோடியில் கட்டப்பட்டு வரும் ஜி.என். மில்ஸ் மேம்பாலம் அடுத்த மாதம் 15-ந் தேதிக்கு பிறகு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.
ஜி.என். மில்ஸ் மேம்பாலம்
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்ஸ் மேம்பாலம் 658 மீட்டர் நீளத்துக்கு ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மேம்பால பணிகளை விரைவுபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேம்பால பணியையொட்டி வாகனங்கள் செல்லும் சர்வீஸ் சாலையையும் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்த மேம்பால பணிகள் அனைத்தும் முடிந்து அடுத்த மாதம்(ஜூன்) 15-ந்தேதிக்கு பிறகு திறந்து போக்குவரத்து நடைபெறும்.
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 1¾ கிலோ மீட்டர் நீளத்துக்கு ரூ.115 கோடி செலவில் நடைபெறும் மேம்பால பணிகள் முடிவடைய இன்னும் 3 மாதங்கள் ஆகும்.
பில்லூர் 3-வது குடிநீர் திட்டம்
கோவை நகருக்கு கூடுதல் குடிநீர் வழங்க நடைபெறும் பில்லூர் 3-வது குடிநீர் திட்டப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 17 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முடிவடையும்போது, கோவை நகருக்கு அடுத்த ஆண்டு(2024) குடிநீர் பிரச்சினை ஏற்படாது. சிறுவாணியில் 45 அடியாக மட்டும் நீர்மட்டத்தை தேக்கி வைக்கும் கேரளாவின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய தமிழக அரசு சார்பில் கேரள அரசுக்கு வற்புறுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பில்லூர் அணையில் தொடர்ந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், அணையை தூர் வார மாற்று திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்.
மேற்கு புறவழிச்சாலை முதல்கட்ட பணிகளுக்கான டெண்டர் முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.