சுகாதாரமற்ற முறையில் விற்பனையாகும் ஆட்டு இறைச்சி
கள்ளக்குறிச்சியில் கழிவுநீர் கால்வாய் ஓரத்தில் சுகாதாரமற்ற முறையில் ஆட்டு இறைச்சி விற்பனை நடைபெறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே நகராட்சி சார்பில் கடைகள் அமைத்து தர வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
கள்ளக்குறிச்சி
கழிவுநீர் கால்வாய் ஓரம்
கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் சுமார் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சியாக இருந்த போது பஸ் நிலையம் அருகில் பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆடுகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்யும் வகையில் ஆடு தொட்டி இருந்தது.
இதன் பின்னர் கள்ளக்குறிச்சி நகராட்சியாக தரம் உயர்ந்த பிறகு ஆட்டுதொட்டி இருந்த இடத்தில் பஸ் நிலைய விரிவாக்கம், சைக்கிள் நிறுத்துவதற்காக அந்த இடம் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நகராட்சி சார்பில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு இடம் ஒதுக்கி கடைகள் கட்டப்படவில்லை. இதனால் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் உள்ள சேலம் மெயின்ரோடு, துருகம் சாலை, கச்சிராயபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் ஓரத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வியாபாரிகள் திறந்த வெளியில் சுகாதாரமற்ற நிலையில் ஆடுகளை அறுத்து இறைச்சி விற்பனை செய்து வருகிறார்கள்.
சுகாதார சீர்கேடு
இப்படி கழிவு நீர் செல்லும் வாய்க்கால் ஓரத்தில் சுகாதாரமற்ற நிலையில் விற்பனை செய்யப்படும் இறைச்சியை வாங்கி உண்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே ஆடுகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து வதைத்து சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள் கட்டித்தர வேண்டும் என இறைச்சி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடைகள் கட்ட வேண்டும்
இதுபற்றி கள்ளக்குறிச்சி நுகர்வோர் சங்க செயலாளர் அருண்கென்னடி கூறும் போது, கள்ளக்குறிச்சியில் திறந்த வெளியில் சிலர் கடைகள் வைத்து ஆட்டு இறைச்சி விற்பனை செய்கின்றனர். பொதுமக்களும் வேறு வழியின்றி அந்த இறைச்சியை வாங்கி சமைத்து சாப்பிடுகின்றனர். இதனால் பல்வேறு விதமான நோய் பரவும் சூழல் உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் உணவு பாதுகாப்பு அலுவலர், நகராட்சி சுகாதார ஆய்வாளர், மாவட்ட அதிகாரிகள் அனைவரும் செல்கின்றனர். ஆனால் சுகாதாரமற்ற நிலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதை அவர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். சுகாதாரமான முறையில் ஆட்டு இறைச்சி மற்றும் மீன்களை வியாபாரம் செய்வதற்கு வசதியாக நகராட்சி சார்பில் கடைகள் கட்டி வாடகைக்கு விட வேண்டும். அதேபோல் முதல் நாள் அறுக்கப்பட்ட மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி ஆகியவற்றை குளிர்பதன எந்திரத்தில் 2 முதல் 3 நாட்கள் வரை வைத்து விற்பனை செய்கின்றனர். இதை சமைத்து உண்பதால் உடல் ரீதியாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாதத்திற்கு 2 முறையாவது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.