விராலிமலை ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை தீவிரம்


விராலிமலை ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை தீவிரம்
x

தீபாவளி பண்டிகையையொட்டி விராலிமலை ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைெபற்றது. இதில் ஆடுகள் ரூ.1 கோடிக்கு விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை

விராலிமலை:

ஆட்டுச்சந்தை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து ஆடுகளை வாங்கியும், விற்பனை செய்தும் செல்வது வழக்கம். இதனால் வாரந்தோறும் அதிகாலை முதலே இச்சந்தையில் கூட்டம் அதிகமாக காணப்படும். கடந்த ஒரு மாத காலமாக புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலானோர் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்து இருந்தனர். இதனால் அந்த மாதம் முழுவதும் ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்தது. இந்நிலையில் நேற்றுடன் புரட்டாசி மாதம் நிறைவடைந்தது.

5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள்

வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பண்டிகையையொட்டி நேற்று விராலிமலையில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ஆடுகளின் வரத்து அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக சுமார் 2 ஆயிரத்து 500 ஆடுகள் வரும் நிலையில், தீபாவளியையொட்டி சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் இந்த வாரச்சந்தைக்கு விற்பனைக்கு வந்திருந்தன.

ரூ.1 கோடிக்கு விற்பனை

ஆடுகளின் விலை ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.15 ஆயிரம் வரை விற்றதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு சில வியாபாரிகள் பண்டிகையை காரணம் காட்டி ஆட்டின் விலையை அதிகமாக நிர்ணயிப்பதால் ஆடுகள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறி சென்றனர். நேற்றைய சந்தையில் ஆடுகளின் விற்பனை ரூ.1 கோடி இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story