ஆடுகள் விலை வீழ்ச்சி
குண்டடம் வாரச் சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரிப்பால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
வாரச்சந்தை
சனிக்கிழமை தோறும் கூடும்
குண்டடம் வாரச் சந்தைக்கு சனிக்கிழமை ேதாறும் கூடுகிறது. அதன்படி நேற்று கூடிய வாரச்சந்தைக்கு குண்டடம், ஊதியூர், கொடுவாய், மேட்டுக்கடை, சூரியநல்லூர், பூளவாடி, பெல்லம்பட்டி, தாராபுரம், பல்லடம், பொங்கலூர் பகுதிகளிலிருந்து ஆடு மற்றும் கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அதே போல் வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளும் கொண்டு வரப்பட்டது.
ஆடு மற்றும் கோழிகளை வாங்குவதற்காக , திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்று கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்தனர். வாரம்தோறும் குண்டடம் சந்தைக்கு 1500 முதல் 2 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். அவை அனைத்தும் காலை 8 மணிக்குள் விற்று தீர்ந்துவிடும். ஆனால் இந்தவாரம் ஆடுகளின் வரத்து அதிகரித்து காணப்பட்டது. 2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வரத்து அதிகரித்திருந்ததால் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.
கடந்த வாரம் 10கிலோ ஆடு ரூ.6 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் 10 கிலோ ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5500 வரை விற்பனையானது. கடந்த வாரம் .ரூ.12 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்த குட்டியுடன் கூடிய பெரிய ஆடு இந்த வாரம் ரூ.9 ஆயிரத்து 500ஆக குறைந்துவிட்டது.
நாட்டுகோழிகள்
இந்த வாரம் கோழிகள் மற்றும் சண்டையிடும் சேவல்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். இறைச்சிக்கு விற்கும் கோழிகள் கடந்த வராம் 1 கிலோ ரூ.480 முதல் ரூ.520 வரை விலைபோனது. இந்தவாரம் 1 கிலோ ரூ.500 முதல் ரூ.580 வரை விலைபோனது. நல்ல தரமான கட்டுச் சேவல்கள் கடந்த வாரம் ரூ.2000 முதல் ரூ.3500 வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.2,500 முதல் ரூ.4000 வரை விற்பனையானது என வியாபாரி ஜெயராம் தெரிவித்தார்.