ஆடுகள் விற்பனை மும்முரம்
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
மத்தூர்:
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
வாரச்சந்தை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை கூடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் லாரிகளில் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், பொதுமக்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
ஆடுகளை வாங்குவதற்காக வியாபாரிகள், பொதுமக்கள் சந்தையில் குவிந்தனர். சுமார் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7,000 வரை விற்பனையானது. ஆடுகளை போட்டி போட்டு விலை கேட்டதால் விற்பனை மும்முரமாக நடைபெற்றது. உள்ளூர் ஆடுகளை வாங்குவதை விட கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வரும் ஆடுகள் குறைவான விலைக்கு விற்கப்பட்டதால் வெளிமாநில ஆடுகளையே வாங்கி சென்றனர். இதனால் உள்ளூர் விவசாயிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வியாபாரிகள் கவலை
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், போச்சம்பள்ளி சந்தையில் எதிர்பாராத விதமாக வெளிமாநில வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். உள்ளூர் ஆடுகள் விற்பனை சற்று மந்தமாக இருந்தது. மேலும் எதிர்பார்த்த அளவு ஆடுகள் விற்பனையில் லாபம் கிடைக்கவில்லை. வெளியூர் ஆடுகளை வாங்க வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டியதால் லாபமும் மிக குறைவாகவே கிடைத்தது.
இந்த போச்சம்பள்ளி வாரச்சந்தையில் சுமார் 2,500 முதல் 3,500 ஆடுகள் வரை விற்பனையானது. ஆடுகள் மட்டுமே சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானது என்று தெரிவித்தனர். போச்சம்பள்ளி வாரச்சந்தையில் வெளிமாநில ஆடுகள் அதிக அளவில் விற்பனையானதால் உள்ளூர் விவசாயிகள், வியாபாரிகள் கவலை அடைந்தனர்.