மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்


மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரம்
x

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

திருநெல்வேலி

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் விற்பனை மும்முரமாக நடந்தது.

மேலப்பாளையம் சந்தை

நெல்லை மேலப்பாளையம் மாநகராட்சி கால்நடை சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் செயல்படும். இங்கு ஆடு, மாடுகள், கோழி மற்றும் பல்வேறு பொருட்கள் வியாபாரிகள், விவசாயிகளால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பண்டிகை மற்றும் கோவில் கொடை விழா காலங்களில் ஆடுகள் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆடுகள் விற்பனை

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று திறக்கப்பட்ட மேலப்பாளையம் கால்நடை சந்தையில் வியாபாரிகள், விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக அதிகளவு கொண்டு வந்திருந்தனர். 2,500-க்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. அவை எடை, தோற்ற அடிப்படையில் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதிக எடை கொண்ட கருப்பு நிற செம்மறி கிடா ஒன்று ரூ.40 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.

மும்முரமாக நடைபெற்ற சந்தையில் வியாபாரிகள் மற்றும் முஸ்லிம்கள் தங்களுக்கு தேவையான ஆடுகளை வாங்கிச்சென்றனர். வருகிற வாரங்களிலும் மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் வாங்க கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது.

நாட்டுக்கோழி

மீன்பிடி தடைக்காலம் இருப்பதால் கோழி இறைச்சி மற்றும் மீன்கள் விலை அதிகரித்து உள்ளது. இதனால் மேலப்பாளையம் சந்தையில் நாட்டுக்கோழி அதிகளவு விற்பனை ஆனது.


Next Story