இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகள்
பாபநாசம் பகுதியில் இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்படுகின்றன.
பாபநாசம்:
பாபநாசம் பகுதியில் இயற்கை உரத்துக்காக மேய்ச்சலுக்கு ஆடுகள் விடப்படுகின்றன.
இயற்கை உரம்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்துக்கு கால்நடைகளின் கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்த சமீப காலமாக விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
முந்தைய காலங்களில் கால்நடை கழிவுகளை இயற்கை உரமாக வயல்களுக்கு இட்டு அதிக அளவில் விவசாயம் செய்து வந்தனர். இதற்காக விவசாயிகள் அதிக அளவில் வீடுகளில் கால்நடைகளை வளர்த்து வந்தனர். சமீப காலமாக கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டதால் கால்நடை கழிவுகள் அதிக அளவில் கிடைப்பதில்லை.
நோய் பாதிப்பு
இதனால் இயற்கை உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ரசாயன உரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது. ரசாயன உரங்களால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு, தானியங்களை உண்ணும் மனித இனம் மட்டுமின்றி கால்நடைகள் உள்பட அனைத்து உயிரினங்களும் பல்வேறு நோய் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. சமீப காலமாக ரசாயன உரங்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக சில விவசாயிகள் மீண்டும் இயற்கை உரத்துக்கு மாறி வருகின்றனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து...
கால்நடைகளை வயல்களில் அடைத்து வைப்பதன் மூலம் கால்நடைகளின் கழிவுகள் விவசாய நிலங்களுக்கு இயற்கை உரம் சிறந்த உரமாக கிடைக்கிறது. இதற்காக ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான செம்மறி ஆடுகள், மாடுகள், வாத்துகள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மேய்ச்சலுக்காகவும், இயற்கை உரத்துக்காகவும் கொண்டுவரப்பட்டு கழிவுகளை இயற்கை உரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
சிலர் வயல்களில் மாடுகளை மேய்ச்சலுக்கு இயற்கை உரத்துக்காக விட்டுள்ளனர். இதற்காக ஆடு, மாடுகளின் உரிமையாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வயல்களின் உரிமையாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்கள். இதன்மூலம் ஆடு, மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஒரளவு வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் கூறினர்.