நாமக்கல் அருகேவெறிநாய்கள் கடித்ததில் 29 ஆடுகள் செத்தன


நாமக்கல் அருகேவெறிநாய்கள் கடித்ததில் 29 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 9 Jun 2023 7:00 PM GMT (Updated: 10 Jun 2023 5:08 AM GMT)
நாமக்கல்

நாமக்கல் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 29 ஆடுகள், 5 கோழிகள் செத்தன.

ஆடுகள் செத்தன

நாமக்கல் அடுத்த வீசாணம் பக்கம் உள்ள விட்டப்பநாயக்கன்பட்டி ராசாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 29 ஆடுகள் மற்றும் 10 கோழிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டு இருந்த ஆடு, கோழிகளை நேற்று முன்தினம் இரவு பட்டிகளில் அடைத்தார்.

இதையடுத்து நேற்று காலை பட்டியில் இருந்த 29 ஆடுகள், 5 கோழிகள் ரத்த வெள்ளத்தில் செத்து கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாஸ்கரன் கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் செத்து கிடந்த ஆடு, கோழிகளை பரிசோதனை செய்தனர். அதில் வெறிநாய்கள் கடித்ததில் ஆடு, கோழிகள் செத்தது தெரியவந்தது. பின்னர் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் குழி தோண்டி இறந்த ஆடுகள் அடக்கம் செய்யப்பட்டன.

நிவாரணம்

நாமக்கல்லை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கடந்த சில நாட்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வந்த நிலையில் ஒரே நாளில் 29 ஆடு, 5 கோழிகளை வெறிநாய்கள் கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே ஆடுகள் மற்றும் கோழிகள் செத்ததால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயி பாஸ்கரனின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story