வெறிநாய்கள் கடித்து 68 ஆடுகள் சாவு


வெறிநாய்கள் கடித்து 68 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 12 Feb 2023 6:46 PM GMT)

ராமநாதபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 68 ஆடுகள் இறந்தன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 68 ஆடுகள் இறந்தன.

வெறிநாய்கள் கடித்தன

ராமநாதபுரம் அருகே உள்ள முடுக்குத்தரவை பகுதியை சேர்ந்தவர் லெட்சுமி. இவர் சொந்தமாக ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். இந்த ஆடுகளை அவர் பகல் நேரங்களில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு இரவில் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் அடைப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் லெட்சுமி வழக்கம்போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு இரவில் ஆடுகளை தென்னந்தோப்பில் அடைத்துவிட்டு அருகில் உள்ள வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலையில் ஏராளமான வெறிநாய்கள் அந்த தென்னந்தோப்பிற்குள் புகுந்தன. பின்னர் அவைகள், ஆடுகளின் கூட்டத்திற்குள் புகுந்து ஆடுகளை விரட்டி விரட்டி கடித்தன. நாய்களை கண்ட ஆடுகள் நாலாபுறமும் சிதறி ஓடின. ஆனாலும் வெறிநாய்கள் கண்ணில்பட்ட ஆடுகளை எல்லாம் கடித்து குதறின.

68 ஆடுகள் பலி

ஆடுகளின் கதறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த லெட்சுமி வெறிநாய்கள் ஆடுகளை கடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் அந்த நாய்களை விரட்ட முயன்றார். ஆனால் அவரையும் வெறிநாய்கள் கடிக்க துரத்தியது. இதனால் பயந்து போன லெட்சுமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் நாய்களை அங்கிருந்து விரட்டி விட்டனர்.

இருப்பினும் வெறிநாய்கள் கடித்து குதறியதில் 68 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும், 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளன. இறந்து கிடந்த ஆடுகளின் உடல் உறுப்புகள் தோப்பில் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

பொதுமக்கள் கோரிக்கை

இதுகுறித்து அறிந்த ராமநாதபுரம் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபாகரன் ஆகியோர் அங்கு சென்று விசாரணை நடத்தி லெட்சுமிக்கு ஆறுதல் கூறினர்.

மேலும், பல பகுதிகளில் வெறிநாய்கள் அட்டகாசம் அதிகரித்து உள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story