சதுரகிரி மலையில் ஆடுகளை பலியிட்டவர் கைது


சதுரகிரி மலையில் ஆடுகளை   பலியிட்டவர் கைது
x

சதுரகிரி மலையில் அனுமதியின்றி ஆடுகளை பலியிட்டவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சதுரகிரி மலையில் அனுமதியின்றி ஆடுகளை பலியிட்டவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவருடைய உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருப்பசாமி கோவில்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் நாள் வத்திராயிருப்பு அருகே உள்ள சுந்தரபாண்டியம் பகுதியை சேர்ந்த மக்கள், சதுரகிரி மலையில் உள்ள பலாவடி கருப்பசாமி கோவிலில் ஆடுகளை பலியிட்டு அன்னதானம் வழங்குவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலைபுலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வனப்பகுதிக்குள் சென்று ஆடுகளை பலியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர். இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள், கார்த்திகை மாத கடைசி நாளன்று மாற்றுப்பாதை வழியாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அருகே உள்ள பலாவடி கருப்பசாமி கோவிலுக்கு 5 ஆடுகளுடன் சென்றதாக கூறப்படுகிறது.

அன்னதானத்திற்கு ஆடுகள் பலி

அங்கு 2 ஆடுகளை பலியிட்டு அன்னதானத்திற்கு சமைத்துள்ளனர். மேலும் அதே பகுதியில் அனுமதி இன்றி தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று பலியிடாமல் இருந்த ஆடுகளையும், அனுமதி இன்றி தங்கி இருந்த பக்தர்களையும் தாணிப்பாறை அடிவாரப்பகுதிக்கு அழைத்து வந்தனர்.

இதில் சோமசுந்தரம் (வயது56), தர்மபுத்திரன் ஆகிய 2 பேரை சாப்டூர் வனத்துறையினர் விசாரணைக்காக சாப்டூர் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். இதில் சோமசுந்தரம் என்பவரை கைது செய்தனர். அவர் மீது தடையை மீறி வனப்பகுதிக்குள் ஆடுகளை பலியிட்டது, வனவிலங்குகளுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது, அனுமதி இன்றி மலைப்பகுதியில் தங்கி இருந்தது உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

முற்றுகை

இதற்கிடையே வனத்துறை நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் வனத்துறையினர், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story