நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
பக்ரீத் பண்டிகையையொட்டி நெல்லை மேலப்பாளையம் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
நெல்லை மேலப்பாளையத்தில் வாரந்தோறும் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. அதாவது திங்கட்கிழமை மாடுகள் விற்பனையும், செவ்வாய்க்கிழமை ஆடுகள் விற்பனையும் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இஸ்லாமியர்கள் அதிக அளவில் ஆடுகள், மாடுகளை வாங்கி குர்பானி கொடுப்பது வழக்கம்.
நேற்று மேலப்பாளையம் கால்நடை சந்தை நடைபெற்றது. நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதாவது வெள்ளாடு, செம்மறி கிடா, மயிலம்பாடி, பொட்டுக்குட்டி, வேலி ஆடு, பிள்ளைபோர், கரும்போர் என பல்வேறு வகைகளை சேர்ந்த ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அவற்றை பொதுமக்கள், வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். மேலும் ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் வாங்க வியாபாரிகள் வந்திருந்தனர்.
ஆடுகள் நேற்று குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.65 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. குறிப்பாக உசிலம்பட்டியில் இருந்து வந்த ஒரு நாட்டு செம்மறி ஆடு ரூ.65 ஆயிரத்துக்கு விலை போனது. ஒரே நாளில் சுமார் ரூ.6 கோடிக்கு அதிகமாக ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.