ரம்ஜான் பண்டிகையையொட்டிவேப்பூர் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ரம்ஜான் பண்டிகையையொட்டிவேப்பூர் வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 22 April 2023 12:15 AM IST (Updated: 22 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையையொட்டி வேப்பூரில் நடந்த வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

கடலூர்

ராமநத்தம்,

வாரச்சந்தை

கடலூர் மாவட்டம் வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று ஆட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச்சந்தைக்கு வேப்பூர், சேப்பாக்கம், பெரியநெசலூர், அரியநாச்சி, கண்டபங்குறிச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள் தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை கொண்டு வந்து வியாபாரிகளிடம் விற்பனை செய்து செல்வார்கள். குறிப்பாக தீபாவளி, பொங்கல், பக்ரீத், ரம்ஜான் போன்ற பண்டிகைகளுக்கு முன்பு நடைபெறும் இந்த சந்தையில் சுமார் ரூ.5 கோடிக்குமேல் ஆடுகள் விற்பனை நடைபெறும்.

கூட்டம் அலைமோதியது

அந்த வகையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு ரம்ஜான் பண்டிகையையொட்டி ஏராளமான வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதனை வாங்க கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள், வியாபாரிகள் என பலரும் அதிகாலையிலேயே வாகனங்களில் வந்ததால், வாரச்சந்தையில் கூட்டம் அலைமோதியது.

மேலும் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்து, வாங்கி வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று நடந்த வாரச்சந்தையில் ரூ.6 கோடிக்குமேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story