மேலூர் சந்தையில் தீபாவளிக்காக ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
மேலூர் சந்தையில் தீபாவளிக்காக ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது
மேலூர்,
மதுரை மாவட்டம் மேலூரில் திங்கட்கிழமை தோறும் வார சந்தை பெரிய அளவில் நடை பெற்று வருகிறது. வரும் திங்கட்கிழமையன்று தீபாவளி என்பதால் நேற்று திங்கட் கிழமை நடைபெற்ற வார சந்தையில் பல்வேறு இடங்களில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு அதிகமாக ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
ஒவ்வொரு ஆடும் அதன் எடைக்கு ஏற்ப ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரத்துக்கும் மேல்விற்பனை ஆனது. திண்டுக்கல், நத்தம், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, மணப்பாறை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், காரைக்குடி, விருதுநகர் உட்பட பல்வேறு இடங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை விலைக்கு வாங்கி வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
நேற்று ஒரு நாள் மட்டும் 3 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் மேலூர் வார சந்தையினுள் தரை பகுதி சேறும் சகதியுமாக இருந்ததால் ஆடுகள் விற்பனை சந்தையில் ஆங்காங்கே நடைபெற்றது.