ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x

ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.

ராணிப்பேட்டை

வாரச்சந்தை

ராணிப்பேட்டையில், வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தையில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுடன், காய்கனி முதல் கருவாடு வரை அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் சந்தைக்கு வந்து தாங்கள் கொண்டு வந்த பொருட்களை விற்றும், தேவையான பொருட்களை வாங்கியும் செல்கின்றனர். மேலும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

ரூ.1 கோடிக்கு வியாபாரம்

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் ராணிப்பேட்டை வாரச் சந்தையில் நேற்று ஆடு வியாபாரம் சூடு பிடித்தது. அதிகாலை சுமார் 4.30 மணியளவில் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளையும், கோழிகளையும் விற்பதற்காக சந்தைக்கு ஓட்டி வந்தனர். ஆடு வாங்க ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து ஆடுகளை வாங்கி சென்றனர்.

கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கருப்பு ஆடு, நாட்டு ஆடு, சிவப்பு ஆடு, ராமநாதபுரம் வெள்ளை உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்கு வந்தன. ஆட்டின் வயது, எடைக்கு தகுந்தவாறு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15,000 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. சுமார் ரூ.1 கோடி வரை ஆடு வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் துணிமணிகள், காய்கனிகள் பழ வகைகள் உள்ளிட்ட பொருட்களும் விறுவிறுப்பாக விற்பனையானது.


Next Story