கோபி, ஊஞ்சலூர் பகுதி ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
பிரதோஷ வழிபாடு
கோபி டவுன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. பின்னர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நந்தீஸ்வரர் வாகனத்தில் ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வரர் கோவிலின் உள்பிரகாரத்தில் 3 முறை வலம் வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோபி மாதேஸ்வரர் கோவில் வீதியில் அமைந்துள்ள மாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாதேஸ்வரர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதேபோல் ஊஞ்சலூர் நாகேஸ்வர சாமி கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி உற்சவ மூர்த்தியான நாகேஸ்வரர், அம்மன் சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அர்ச்சனை, ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாகேஸ்வரர், அம்மன் நந்தி வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவிலில் இரட்டை நந்திக்கும், கொந்தளம் நாகேஸ்வரசாமி கோவிலில் உள்ள நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. பழனிக்கவுண்டம்பாளையம் பழனியாண்டவர் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.