தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடுதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 April 2023 7:00 PM GMT (Updated: 14 April 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டு பிறப்பு

தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அந்தந்த கோவில்களில் அதிகாலை முதல் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்படி தர்மபுரியில் உள்ள சாலை விநாயகர் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடந்தது. பின்னர் சாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு தங்ககவசம் சாத்தப்பட்டு உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சாமி திருவீதிவிழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கோட்டை கோவில்

தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவிலில் நடந்த வழிபாட்டில் சாமிக்கு பழங்களால் அலங்கார சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோன்று கோட்டை கல்யாண காமாட்சி உடனாகிய மல்லிகர்ஜூன சாமி கோவில், வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சாமி கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன், மகாலிங்கேஸ்வரர் கோவில், வேல் முருகன் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில், சவுலுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில், மதிகோன்பாளையம் மாரியம்மன் கோவில், எஸ்.வி.ரோடு அபய ஆஞ்சநேயர் கோவில் லிட்டர் அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

கூழ் ஊற்றி வழிபாடு

இதேபோன்று தர்மபுரி குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி இடும்பன் ஊர்வலம், ஊர் காவல் தெய்வமான அக்கரைப்பட்டி முனியப்பனுக்கு பொங்கல் வைக்கும் விழா ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூஜை செய்யப்பட்ட கூழ் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.

இதேபோல் குமாரசாமிபேட்டை பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்மன் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று செல்லியம்மன் கோவில், உழவர் தெரு மாரியம்மன் கோவில், செல்வகணபதி கோவில், விநாயகர் கோயில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அஷ்டவராகி அம்மன்

இதேபோன்று காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள அஷ்ட வராகி அம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த விழாவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், பி.அக்ரஹாரம் முனியப்பசாமி கோவில், வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவில், மொரப்பூர் சிங்காரத்தோப்பு முனியப்பன் கோவில், பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேச நாதேஸ்வரர் கோவில், மூக்கனூர் ஆதிமூல பெருமாள் கோவில், மணியம்பாடி வெங்கட்ரமண சாமி கோவில், உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story