விண்ணுலகில் இருந்து மண்ணுலகுக்கு வந்த தேவர்கள்
சேலம் குகையில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று கோலாகலமாக நடைபெற்ற வண்டி வேடிக்கை நிகழ்ச்சியில் விண்ணுலகில் இருந்து மண்ணுலகுக்கு வந்த தேவர்கள் போல வேடமிட்டு வந்த காட்சிகளால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
சேலம் குகை மாரியம்மன்
சேலம் குகையில் மாரியம்மன், காளியம்மன், முனியப்பன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழா சிறப்பாக நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு ஆடித்திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. பின்னர் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. நேற்று முன்தினம் கோவிலில் தீமிதி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வண்டி வேடிக்கை
ஆடித்திருவிழாவின் முக்கிய திருவிழாவான வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று இரவு வெகுவிமரிசையாக நடைபெற்றது. அப்போது குகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கண்ணை கவரும் வகையில் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் கடவுள் வேடம் அணிந்தவர்கள் ஊர்வலமாக வந்தனர். இதை பார்த்த போது விண்ணுலகில் இருந்து மண்ணுலகுக்கு தேவர்கள் வந்தது போன்று இருந்தது. இதைக்கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
அதன்படி குகை ஆண்டி செட்டி தெரு வண்டி வேடிக்கை குழு சார்பில் 118-வது ஆண்டாக வண்டி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதில் பக்தர்கள் மாரியம்மன், காளியம்மன் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தது தத்ரூபமாக இருந்தது. இதைப்பார்த்த அங்கிருந்த மக்கள் மாரியம்மன், காளியம்மனை நேரில் பார்த்தது போல கையெடுத்து கும்பிட்டு வழிபட்டனர்.
சிவன், பார்வதி, முருகன்
இதேபோன்று அம்பலவாண சாமி கோவில் தெரு வண்டி வேடிக்கை கமிட்டியின் 17-ம் ஆண்டு வண்டி வேடிக்கை குழு சார்பில் பக்தர்கள் சிவன், பார்வதி, முருகன் வேடம் அணிந்து வலம் வந்த காட்சியை பார்த்த மக்கள் பரவசம் அடைந்தனர். மேலும் பஞ்சபாண்டவர் அலங்காரம் அருமையாக இருந்தது.
சேலம் புலிகுத்தி தெரு குகை இளைஞர் வண்டி வேடிக்கை குழு சார்பில் பக்தர்கள் முப்பெரும் தேவியர் வேடம் அணிந்து வலம் வந்தனர். இதைப் பார்த்த அங்கிருந்த பெண் பக்தர்கள் பலர் முப்பெரும் தேவி, முப்பெரும் தேவி என்று கூச்சலிட்டபடி வணங்கினர். இதேபோல ஜிக்கா, பக்கா நண்பர்கள் குழு சார்பில் 38-ம் ஆண்டு வண்டி வேடிக்கை விழா கமிட்டி சார்பில் பக்தர்கள் லட்சுமி, சரபமூர்த்தி, நரசிம்மர் ஆகிய வேடம் அணிந்து வலம் வந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
விழாவையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து வந்த அலங்கார வண்டிகள் குகை மாரியம்மன் கோவில் முன்பு அணிவகுத்து வந்தது. இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதனால் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சேலம் குகை வண்டி வேடிக்கை நிகழ்ச்சியையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கோவிலை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.