கோகுல்ராஜ் கொலை வழக்கு: விசாரணையில் தவறான தகவல் அளித்ததாக சுவாதி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு- 2 வாரத்தில் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவு
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியம் அளித்ததற்காக சுவாதி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியம் அளித்ததற்காக சுவாதி மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
10 பேருக்கு தண்டனை
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சக மாணவியுடன் பழகிய விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கொலை வழக்கில் யுவராஜ் உள்பட 10 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல இந்த வழக்கில் இருந்து 5 பேர் விடுதலையானதை எதிர்த்து கோகுல் ராஜின் தாயார் சித்ரா மனு தாக்கல் செய்தார்.
தவறான தகவல்கள்
இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் கடந்த 25-ந்தேதி சுவாதியை மதுரை ஐகோர்ட்டுக்கு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரிடம் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் ஒரு வீடியோவை காண்பித்து அதில் இருக்கும் பெண் நீங்கள் தானே? என கேட்டனர்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். அந்த பெண்ணுடன் இருப்பது கோகுல்ராஜ் தானே என்ற கேள்விக்கு சரியாக தெரியவில்லை என்றார். மேலும் ஒரு ஆடியோவை போட்டு காண்பித்து அதில் இடம்பெற்றுள்ள பெண் குரல் உங்களுடைய தானா? என கேட்டபோது அதையும் சுவாதி மறுத்தார். இதனால் சத்திய பிரமாணம் எடுத்துக்கொண்டு பொய்யான தகவல்களை கோர்ட்டில் தெரிவித்துள்ளீர்கள். உங்கள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுப்போம். உண்மையை சொல்ல முயற்சி செய்யுங்கள் அவகாசம் அளிக்கிறோம் என்று கூறி இந்த வழக்கை 30-ந் தேதிக்கு (அதாவது நேற்றைக்கு) ஒத்திவைத்தனர்.
உறுதியாக இருக்கிறேன்
அதன்படி இந்த வழக்கு அதே நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுவாதியை போலீசார் ஆஜர்படுத்தினர்.
அவரிடம் நீதிபதிகள், கடந்த 25-ந்தேதி நீங்கள் தெரிவித்த தகவல்களில் உறுதியாக இருக்கிறீர்களா? அல்லது வேறு ஏதேனும் தகவல்கள் தெரிவிக்கிறீர்களா என்று கேட்டனர். அதற்கு அவர், அன்றைய தினம் தெரிவித்த கருத்துகளில் உறுதியாக இருக்கிறேன். வேறு தகவல்கள் இல்லை என்றார்.
சத்தியபிரமாணம்
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
ஒரு வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகள் உண்மை தகவல்களை தெரிவித்தால்தான் வழக்கு விசாரணை முழுமை அடையும். சாட்சிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையை கொண்டு தான் வழக்கின் தன்மையை அறிய முடியும். சாட்சிகள் உண்மையை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சத்தியப்பிரமாணம் செய்யப்படுகிறது. சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறும்போது அது நீதித்துறையை பாதிக்கிறது. அந்த வகையில் இந்த வழக்கில் அழுத்தமான சில முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.
தவறான வாக்குமூலம் அளித்த சாட்சி தப்பிக்கக்கூடாது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதி, மாஜிஸ்திரேட்டு முன்பு அளித்த வாக்குமூலத்தை, விசாரணை கோர்ட்டில் மாற்றி தெரிவித்துள்ளார். பொய்யான தகவல்களை தெரிவித்ததற்காக இவர் மீது கடந்த 2018-ம் ஆண்டில் கீழ் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
அவமதிப்பு வழக்கு
இதுபோன்ற பொய் வாக்குமூலங்கள், நீதித்துறையின் அடிவேர் வரை பாதிக்கும். இந்த விஷயத்தை நீதிமன்றம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது. முக்கிய குற்ற வழக்குகளில் இதுபோன்ற பிறழ் சாட்சிகளால் குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்.
எனவே தான் போலீசார் வழக்குகளில், சாட்சிகளின் வாக்குமூலங்களை மாஜிஸ்திரேட்டு முன்பு பெறுகின்றனர். இந்த வழக்கிலும் முக்கிய சாட்சியான சுவாதி, என்ஜினீயரிங் பட்டதாரி. இந்த வழக்கில் அவரது வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தான் அவரை நேரில் அழைத்து விசாரணை செய்தோம். ஆனாலும் அவர் உண்மையை கூறாமல் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் கொடுத்தும் அதை அவர் பயன்படுத்தவில்லை. இதனால் கோர்ட்டில் தவறான தகவல்களை தெரிவித்ததற்காக அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படுகிறது.
இதுகுறித்து அவர் உரிய விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக இந்த வழக்கு 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கீழ்கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கையும் இந்த கோர்ட்டுக்கு மாற்றுகிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.