கோகுல்ராஜ் கொலை வழக்கு: வீடியோ காட்டி நீதிபதிகள் கேட்ட கேள்வியால் கண்கலங்கிய சுவாதி..!


கோகுல்ராஜ் கொலை வழக்கு: வீடியோ காட்டி நீதிபதிகள் கேட்ட கேள்வியால் கண்கலங்கிய சுவாதி..!
x

கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியை மதுரை ஐகோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

மதுரை,

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதிகள், 2011-2015 வரையிலான கல்லூரி காலங்களில் கோகுல்ராஜை தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு சுவாதி தெரியும் என்று பதிலளித்தார்.

உண்மையைச் சொல்லுங்கள்: கோகுல்ராஜுடன் பேசுவீர்களா? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, அதிகமாக பேசுவேன் என்று சுவாதி பதிலளித்தார். அப்போது நீதிபதிகள், கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினர். அந்த வீடியோப் பதிவில் கோகுல்ராஜும், சுவாதியும் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோப்பதிவில் கோகுல்ராஜுடன் வரும் பெண் யார்? என்று நீதிபதிகள் கேட்டனர். அது யாரென்று தனக்கு தெரியவில்லை என்று சுவாதி கூறினார். அது யாரென்று சரியாக நினைவில்லையென்றும் தொடர்ந்து கூறினார்.

அப்போது நீதிபதிகள், இந்த சம்பவம் நடந்து 7 வருடங்கள்தான் ஆகிறது, அந்த சம்பவம் நினைவில் இல்லையா என்றும், வீடியோவில் சல்வார் கமீஸ் அணிந்து வரும் பெண் யார் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், நீங்கள் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனைமுறை கேள்வி கேட்கிறோம் என்றனர். அப்போது நீதிமன்றத்தில் சுவாதி கண்கலங்கி அழுகத் தொடங்கிவிட்டார். அப்போது நீதிபதிகள், "நீங்கள் அழுதாலும் உங்களிடம் இருந்து உண்மையை எதிர்பார்க்கிறோம். எனவே நடந்த உண்மையை கூற வேண்டும்" என்று சுவாதியிடம் நீதிபதிகள் கூறினர்.

சிசிடிவி காட்சி மற்றும் புகைப்படத்தில் கோகுல்ராஜ் உடன் இருப்பது தான் இல்லை என்று தொடர்ந்து கூறினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுவாதிக்கு நீதிபதி எச்சரித்தனர். மேலும் தற்போது வரை நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதானா என சுவாதியிடம் நீதிபதி மீண்டும் கேள்வி எழுப்பினர். ஆம் தற்போது வரை தான் சொன்னது அனைத்தும் உண்மை என்று சுவாதி வாக்குமூலம் அளித்தார்.

மேலும் நீதிபதிகள் உங்களது புகைப்படத்தையே உங்களுக்கு தெரியவில்லை என கூறுவதெல்லாம் ஏற்புடையதல்ல என்று வாழ்க்கையில் முக்கியம் சத்தியமும், நியாயமும், தர்மமும்தான்; சாதி முக்கியமல்ல என்றும் உண்மையை மறைப்பது நீதிமன்ற அவமதிப்பு தான் என நீதிபதிகள் கூறினர்.


Next Story