ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு; அக்காள், தங்கை கைது
நெல்லையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த அக்காள், தங்கையை போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த அக்காள், தங்கையை போலீசார் கைது செய்தனர்.
சங்கிலி பறிப்பு
பாளையங்கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் பலவேசம். இவரின் மனைவி மாரியம்மாள் (வயது 55). இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் சமாதானபுரம் பெல் ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இருந்து டவுனுக்கு வேலைக்கு செல்வதற்காக அரசு பஸ்சில் சென்றார். அப்போது பஸ்சில் மாரியம்மாள் அருகே நின்று கொண்டு இருந்த ஒரு பெண் மாரியம்மாள் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை நைசாக பறித்தார். அப்போது சுதாரித்துக்கொண்ட மாரியம்மாள் அந்த பெண்ணையும் அவருடன் வந்த பெண்ணையும், பஸ் பயணிகள் உதவியுடன் பிடித்தார். பின்னர் 2 பேரும் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அக்காள், தங்கை கைது
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மனைவி வாசுகி (29), அவரின் தங்கை ஆஷா (28) ஆகியோர் என்பதும் அவர்கள் பஸ்சில் பர்தா அணிந்து வந்து, பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் கடந்த 1-ந்தேதி பாளையங்கோட்டை புதுபேட்டையை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் பஸ்சில் சென்ற போது அவரின் கைப்பையில் இருந்த செல்போனை 2 பெண்கள் நைசாக திருடினர்.
இதனை அறிந்த சுப்புலட்சுமி அவர்களை பிடித்து பாளையங்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அவர்கள் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த சந்திரகலா (36), மதுரை இரும்புதுறையை சேர்ந்த நந்தினி (22) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.