விவசாயி மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு


விவசாயி மனைவியிடம் தங்க சங்கிலி பறிப்பு
x

நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தபோது விவசாயி மனைவியிடம் தங்க சங்கிலி பறித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள வண்ணாப்பட்டியை சேர்ந்தவர் முருகானந்தம். விவசாயி. அவருடைய மனைவி செல்வி (வயது 28). நேற்று முன்தினம் இரவு, முருகானந்தம் தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்திருந்தனர்.

இந்தநிலையில் நள்ளிரவில் முருகானந்தத்தின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் 2 பேர் புகுந்தனர். பின்னர் அங்கு தூங்கி கொண்டிருந்த செல்வியின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை நைசாக பறிக்க முயன்றனர். இதனால் தூக்கத்தில் இருந்து செல்வி திடுக்கிட்டு விழித்தார்.

அப்போது, முகத்தில் துணி கட்டியபடி 2 பேர் நின்றதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து திருடன், திருடன் என செல்வி கத்தினார். அந்த சத்தம் கேட்டு எழுந்த முருகானந்தம் சுதாரிப்பதற்குள், செல்வி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு 2 பேரும் தப்பியோட முயன்றனர். இதனையடுத்து பிடிக்க முயன்ற முருகானந்தத்தை 2 பேரும் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் இன்ஸ்பெக்டர் கவிதாமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி ேதடி வருகின்றனர். இதற்கிடையே புளியம்பட்டி, வில்வாதம்பட்டி பகுதிகளில் 2 பேர் சுற்றித்திரிந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.


Next Story