தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு வரவேற்பு
தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்து கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர்
காளையார்கோவில்,
காளையார்கோவில் அருகே சிலையாவூரணி கிராமத்தை சேர்ந்த சண்முகம்-சாந்தி ஆகியோரது மகன் சந்துரு (வயது 19). இவரது தந்தை விவசாயம் செய்து வருகிறார். சந்துரு கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. எலக்ட்ரானிக்ஸ் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அசாமில் ஆசிய அளவில் நடைபெற்ற கோ-கோ போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். பின்னர் சொந்த ஊருக்கு வந்த சந்துருவிற்கு சிலையாஊரணி, காளையார்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் வரவேற்பு அளித்தனர். காளையார்கோவிலில் இருந்து வெள்ளை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அமர வைத்து மேளதாளத்துடன் அவரது கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரது பயிற்றுனர் ராஜாவையும் கவுரவப்படுத்தினர், இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை இந்த அளவிற்கு வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும், தற்போது படித்து வரும் கல்லூரி நிர்வாகத்திற்கும் பள்ளி, கல்லூரி பயிற்றுனர்களுக்கும் நன்றி என்றார்.