தவிக்க வைக்கும் தங்கம்; பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்


தவிக்க வைக்கும் தங்கம்; பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்
x

தங்கம் விலை கிடுகிடு உயர்வு தவிக்க வைக்கப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

அனைவரின் வாழ்க்கையிலும் சரி, அரசாங்கங்களின் இயக்கங்களிலும் சரி, தங்கம் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது.

ஏழை எளியவர் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்கத்தின் மீது தாளாத மோகம் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு குண்டுமணி தங்கம்கூட இல்லாமல் தமிழர்களின் இல்லங்களில் சுப துக்ககாரியங்கள் நடப்பது இல்லை.

அதே நேரத்தில் சாமானியர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என எல்லோராலும் தங்கம் ஒரு லாபகரமான, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.

பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற இதரச் சொத்துகள் வீழ்ச்சி அடையக்கூடும். ஆனால் தங்கம் எப்போதும் முன்னணியிலேயே நிற்கும். நிதி நெருக்கடியா? தங்கத்தை அடகுவைத்து அல்லது விற்று உடனடியாக பணமாக்கிகொள்ள முடியும்.

விலை நிர்ணயம்

இந்தியாவுக்கு துபாய், லண்டன் போன்ற இடங்களில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. நமது நாட்டில் மும்பைதான் தங்க 'நெட்வொர்க்' மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கிருந்தே இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான தங்கம் 'சப்ளை' செய்யப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது, 'லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேசன்'தான். ஒவ்வொரு நாளும் (விடுமுறை நாட்களை தவிர) காலை 10.30 மணிக்கும், மதியம் 3 மணிக்கும் அமெரிக்க டாலர்களில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை மையமாக வைத்தும், இன்சூரன்ஸ், இறக்குமதி வரி, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றையும் சேர்த்து அனைத்து நாடுகளிலும் விலை நிர்ணயம் ஆகிறது.

இந்தியாவில் மும்பையில்தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகச்சந்தையில் எப்படி காலை, மாலையில் விலை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதேபோல் இங்கும் விலை தீர்மானிக்கப்படுகிறது.

இவ்வாறாக விலை நிர்ணயம் செய்யப்படும் தங்கத்தின் விலை ஆண்டுக்காண்டு மேல்நோக்கியே பயணிக்கிறது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை

1920-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.21-க்கு விற்பனை ஆன நிலையில், 2001-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 368 ஆகவும், 2011-ம் ஆண்டில் ரூ.22 ஆயிரத்து 104 ஆகவும் உயர்ந்துகொண்டே வந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க் கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத விலை உயர்வாக இது இன்றளவும் பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் விலை சற்று குறையத் தொடங்கி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 880-க்கு விற்கப்பட்டது.

இப்படியாக தொடர்ந்து தங்கம் விலை ரூ.36 ஆயிரத்திற்கும் ரூ.40 ஆயிரத்திற்கும் இடையில் இருந்துவந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கிய நேரத்தில், முதலீட்டாளர்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டினர். இதனால் அதன் விலையும் சற்று சரிந்து காணப்பட்டது. அதையடுத்து மீண்டும் தங்கத்தின் விலை பெருமளவில் ஏறுமுகத்திலேயே இருந்தது.

ஒரு பவுன் ரூ.40 ஆயிரம்

கடந்த மார்ச் மாதம் 7, 8, 9-ந் தேதிகளிலும், ஏப்ரல் மாதம் 14, 15, 16, 17, 18, 19-ந் தேதிகளிலும் ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. அதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டுவந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்துவருவதை பார்க்க முடிகிறது.

கடந்த 2-ந் தேதியன்று மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் தங்கம் விலை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

ராமச்சந்திரன் (நகை வியாபாரி, திண்டுக்கல்):- ஒரு கிராம் தங்கத்தின் விலை தற்போது ரூ.5 ஆயிரத்தை கடந்துவிட்டது. இந்த விலையேற்றம் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாங்கும் சக்தியை வெகுவாக குறைத்துவிடும். இதனால் திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்கி பரிசளிக்க விரும்புபவர்கள் கூட நகையை வாங்காமல் உறவினர்களுக்கு பணமாக கொடுக்கும் நிலை ஏற்பட்டுவிடும். கொரோனா காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை பாதிக்கப்படவில்லை. ஆனால் தங்க நகைகள் விற்பனை பாதிக்கப்பட்டது. அதன் பிறகு தற்போது தான் ஓரளவு நகைகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் தங்கத்தின் தொடர் விலையேற்றம் வாடிக்கையாளர்களை கலக்கமடைய செய்துள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு

ஆனந்தன் (மண்டல தலைவர், திண்டுக்கல் மண்டல விஸ்வகர்ம ஒர்க்கர்ஸ் சங்கம்):- தங்கத்தின் தொடர் விலையேற்றம் காரணமாக நகை தயாரிப்புக்கான ஆர்டர்கள் குறைய தொடங்கியுள்ளது. இதனால் நகை தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் கூட ஓரளவு ஆர்டர்கள் கிடைத்தது. அதன் மூலம் நகை தயாரிக்கும் தொழிலாளர்கள் சிரமம் இன்றி குடும்பம் நடத்தினர். ஆனால் தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்வதால் குடும்ப செலவுக்கு கூட அவர்கள் சிரமப்படும் நிலை ஏற்படும். எனவே மக்களின் வாங்கும் சக்தியை கருத்தில் கொண்டு தங்கத்தின் விலையை குறைக்க நடவடிக்கை வேண்டும்.

பொதுமக்கள் அச்சம்

ரோகிணி (அழகுகலை நிபுணர், பழனி):- ஒரு கிராம் தங்கம் விலை ரூ.5 ஆயிரத்தை கடந்துவிட்டது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒருகிராம் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.3 ஆயிரத்துக்குள் இருந்த தங்கம் விலை தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் நடுத்தர மற்றும் ஏழை மக்களால் இனிவரும் காலங்களில் தங்க நகைகளை வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுவிடும். ஏற்கனவே குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் மக்களுக்கு இந்த விலையேற்றம் பேரிடியாக விழுந்துள்ளது.

விஜயலட்சுமி (குடும்ப தலைவி, பழனி):- சிறுக, சிறுக நகைகளை வாங்கி சேர்த்து தான் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து வைக்கும் நிலை தற்போது உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் தங்க நகைகளை வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ? என்று அச்சமாக உள்ளது. தங்கம் விலையேற்றத்துக்கு ஏற்ப குடும்ப வருமானமும் அதிகரித்தால் நகைகளை வாங்கி சேமிக்க முடியும். எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு தங்கத்துக்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story