தேங்காய் கள உரிமையாளரிடம் கத்திமுனையில்25 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை


தேங்காய் கள உரிமையாளரிடம் கத்திமுனையில்25 பவுன் நகை, ரூ.10 லட்சம் கொள்ளை
x
திருப்பூர்


காங்கயத்தில் கத்திமுனையில் தேங்காய் கள உரிமையாளரிடம் 25 பவுன் நகை, ரூ.10 லட்சத்தை 7 பேர் கொண்ட மர்ம கும்பல் பறித்து சென்றது.

இந்த பரபரப்பு சம்பவம் பற்றி காங்கயம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேங்காய் கள அதிபர்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சாவடிபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 47). இவர் தேங்காய் பருப்பு களம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் குணசேகரன் அவருடைய மனைவி செல்வி மற்றும் மகன்கள் தனுஷ், நிதர்சன் ஆகியோருடன் இருந்தார்.

அப்போது கத்தி மற்றும் இரும்பு கம்பிகளுடன் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் குணசேகரன் வீட்டிற்குள் புகுந்தது. பின்னர் அந்த கும்பலில் ஒருவன் குணசேகரன் கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டினான். ஒருவன் குணசேகரன் மனைவி செல்வி கழுத்தில் கத்தியை வைத்துக்கொள்ள மற்றவர்கள் 2 மகன்களை பிடித்துக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருக்கும் பணம், நகையை எல்லாம் எடுத்து கொடுங்கள் இல்லை என்றால் உங்களை கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர்.

நகை-பணம் கொள்ளை

இதையடுத்து வீட்டின் பீரோவை திறந்து அதில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் ெராக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் செல்வி கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுத்து எடுத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் குணசேகரன் வீட்டில் இருந்து சத்தம் வருவதை கேட்டு சம்பவ இடத்திற்கு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்றனர். இதையறிந்த கொள்ளை கும்பல் நகை, பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.30 லட்சம் என்று கூறப்படுகிறது.

உடனே இதுகுறித்து குணசேகரன் காங்கயம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதி முழுவதும் கொள்ளையர்களை போலீசார் தேடினர். ஆனால் அவர்கள் சிக்்கவில்லை. கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

தனிப்படை அமைப்பு

இந்த சம்பவம் காங்கயம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.

மேலும் கொள்ளையர்களை பிடிக்க காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில் காங்கயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


Next Story