தங்க சேமிப்பு பத்திர விற்பனை தொடக்கம்
தங்க சேமிப்பு பத்திர விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாக காரைக்குடி கோட்ட கண்காணிப்பாளர் தொிவித்துள்ளாா்
காரைக்குடி
காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன்அகமது விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இந்திய அஞ்சல் துறை சார்பில் தங்க சேமிப்பு பத்திரம் தற்போது அனைத்து அஞ்சலக அலுவலகங்களில் மீண்டும் விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து இந்த தங்க பத்திர விற்பனை நேற்று முதல் தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலக அலுவலகங்களில் தொடங்குகிறது. இந்த தங்க சேமிப்பு பத்திரத்தை பெற விரும்பும் பயனாளிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, ஆதார் எண் ஆகியவை மட்டும் அடையாள சான்றாக ஏற்கப்படும். மேலும் வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்.சி. கோடு ஆகியவை கொண்டு வரவேண்டும். இதுதவிர வாரிசு நியமனத்திற்கு வாரிசுதாரரின் வயது, வங்கி கணக்கு எண் மற்றும் அடையாள சான்று ஆகியவை கொண்டு வரவேண்டும். மேலும் இந்த தங்க சேமிப்பு பத்திரம் ஒரு கிராம் ரூ.5923-ம், வட்டி விகிதம் 2.5 சதவீதமும், குறைந்தது 1 கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரையும் இருக்கும். இதுதவிர முதிர்வு காலம் 8 ஆண்டுகளாகவும், முன்முதிர்வு 5 ஆண்டிற்கு பின் மத்திய அரசின் திட்டமாக உள்ளதால் பணத்திற்கு முழு உத்தரவாதம் கொண்டும் இருக்கும். இத்தகைய சிறப்பு அம்சங்களை கொண்டுள்ள இந்த தங்க சேமிப்பு பத்திரத்தை பயனாளிகள் அஞ்சலக அலுவலகத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.